Enable Javscript for better performance
கனவாகத் தொடரும் தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கனவாகத் தொடரும் தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைத் திட்டம்

    By தருமபுரி  |   Published on : 10th July 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகாததால் இந்தத் திட்டம் கனவுத் திட்டமாகத் தொடர்கிறது.

    தொழில் வளத்தில் மிகவும் பின் தங்கியுள்ள தருமபுரி மாவட்டம், விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளது.

    தருமபுரி பகுதியில் விளையும் விவசாய விளைபொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்காக நாள்தோறும் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். இதுதவிர, தனியார் நிறுவன ஊழியர்கள், அலுவலர்கள் பல்வேறு பணி நிமித்தமாக அவ்வப்போது சென்னை சென்று வருகின்றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பலர் சென்னைக்கு செல்கின்றனர். இவர்கள், இதுநாள் வரை சென்னைக்கு பேருந்து மூலமே சென்று வருகின்றனர். இதனால், இந்தப் பகுதி மக்களுக்கு சென்னைக்கு நேரடி ரயில் பயணம் என்பது கனவாகவே உள்ளது.

    இந்தப் பகுதி மக்கள் ரயில் மூலம் சென்னைக்குச் செல்ல வேண்டுமெனில் தருமபுரியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள மொரப்பூர் ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால், கால விரயமும், பொருள் செல்வும் கூடுதலாகிறது. எனவே, சென்னைக்கு ரயில் மூலம் செல்ல தருமபுரி- மொரப்பூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என தொடர்ந்து தருமபுரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் மக்களவையில் பல ஆண்டுகளாக தருமபுரி- மொரப்பூர் இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

    பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தருமபுரி- மொரப்பூருக்கு ரயில் பாதை இருந்தது.

    இரண்டாம் உலகப் போரில் இரும்பின் தேவை அதிகளவில் இருந்ததால் இந்த இருப்புப் பாதையில் இருந்து இரும்பு எடுக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அப்போதிருந்த ரயில் பாதை தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது.

    ஆய்வுப் பணி அறிவிப்பு: தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையடுத்து, கடந்த 2013-ஆம் ஆண்டு தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைத் திட்டம் அமைக்க ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ரயில்வே அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ரூ.228 கோடியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என வரைவு அறிக்கை ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டது. மேலும், வழித்தடம் ஏற்கெனவே இருப்பதால், இடம் வாங்க வேண்டிய தேவையில்லை எனவும், மண் பரிசோதனை செய்ததில் பாதை அமைக்க உகந்ததாக உள்ளதாகவும், வரைவு அறிக்கையில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள அன்புமணி அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைத் திட்டத்தை

    தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அளித்தார்.

    ஆய்வுப் பணிகள் முடிந்த நிலையில், நிகழாண்டு தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைப் பணிகள் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கும் என இந்தப் பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால், மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதைத் திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தருமபுரி மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai