விநாயகர் சிலை விலை குறைவால் தொழிலாளர்கள் வேதனை
By தருமபுரி | Published on : 10th July 2014 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக சிலைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள போட்டியால் மூலப் பொருள்களின் விலை அதிகரித்தும், விநாயகர் சிலைகளின் விலைக் குறைவாக இருப்பதாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி நாடு முழுவதிலும் கொண்டாடப்பட உள்ளது. இந்து அமைப்புகள் ஆண்டுதோறும் பிரம்மாண்ட சிலைகளை அமைத்து வழிபாடு நடத்துவர். இதற்கான சிலை வடிவமைப்புப் பணியில் கடந்தாண்டு வரையில் சொற்ப எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.
சிங்கம், பஞ்சமுகம், காளி உள்பட பல்வேறு வடிவங்களில் விலை கொடுத்து வாங்குவோரைக் கவரும் வகையிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கிலோ ரூ.8 விலையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் மூலப் பொருளை விலைக்கு வாங்கி வந்து 5 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.
சுமார் 10 நாள்களில் சிலை வடிவமைப்புப் பணி நிறைவு பெற்றதும் கிலோ ரூ.400 விலையில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் வாட்டர் பெயின்ட்டால் வர்ணம் தீட்டி விற்கப்படுகின்றன.
இந்தத் தொழிலில் லாபம் அதிகளவில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதுவரையில் மற்றவர்களிடம் வேலை செய்தவர்கள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் 100-க்கும் அதிகமானவர்கள் விநாயகர் சிலைகள் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக உற்பத்திக்கான மூலப் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்த போதும் எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருவதால் இதுவரையில் பிற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாங்கிச் சென்றவர்கள் போக்குவரத்துச் செலவைக் கணக்கிட்டு சிலையின் வேலைப்பாடு சிறப்பாக இருப்பினும் வரத் தயங்குகின்றனர். இதனால், கடந்தாண்டு ரூ.15,000-க்கு விற்கப்பட்ட 15 அடி உயர சிலை தற்போது ரூ.13,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தத் தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் அதியமான்கோட்டையைச் சேரந்த சண்முகம் கூறியது:
வட்டிக்கு பணம் வாங்கி இந்தத் தொழிலில் ஈடுபட்ட போதிலும் இதுவரையில் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருவாய் கிடைத்தது.
தற்போது விநாயகர் சிலை தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் விலை அதிகரித்தும், ஏராளமானவர்கள் இந்தத் தொழிலுக்கு வந்து விட்டதால், போட்டி காரணமாக விலையைக் குறைத்து விற்க வேண்டியுள்ளது என்றார் அவர்.