Enable Javscript for better performance
பாப்பிரெட்டிப்பட்டி முகாமில் அகதிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அகதிகள் முகாமில் போதிய குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால், இலங்கைத் தமிழர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூர் ஊராட்சி, முள்ளிக்காடு அருகேயுள்ள வாணியாறு அணைப் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது.

    இந்த முகாமில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 742 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர்.

    வாணியாறு அணை அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அகதிகள் முகாம் இயங்கி வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்களுக்கு தாற்காலிகமாக தகரத்தாலான குடியிருப்புகள் செய்து தரப்பட்டுள்ளன. முகாம் பகுதியில் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருள்கள் பெறுவதற்காக நியாயவிலைக் கடையும் உள்ளது.

    பூட்டிக் கிடக்கும் வீடுகள்: ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.49.20 லட்சத்தில் 41 குடியிருப்புகள் (தகர சீட்டுகள்) கட்டப்பட்டுள்ளன. அதாவது, கூட்டுக் குடும்பமாக இட வசதியில்லாமல் வசிக்கும் குடும்பத்தினருக்கு இந்தப் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    பணிகள் நிறைவடைந்த நிலையிலும், இந்த முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளுக்கு கழிவுநீர்க் கால்வாய் வசதி, மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை.

    காட்சிப் பொருளான நீர்த்தேக்கத் தொட்டி: வாணியாறு அணை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில் ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லையாம். இதனால், இந்த முகாமில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது.

    சிற்றுந்து வசதி: மேலும், இங்கு வந்து செல்ல காலை 9 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என இரு வேளைகளில் மட்டும் அரசுப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சிற்றுந்து வசதி செய்து தர வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கழிப்பிட வசதி: பாப்பிரெட்டிப்பட்டி முகாமில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இந்த முகாம் அமைந்துள்ள பகுதியில் கழிப்பறைகள் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிநபர் கழிப்பறை, சுகாதார வளாகங்களை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதுகுறித்து அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கூறியது:

    எங்களுக்கு நலத் திட்ட உதவிகளைச் செய்து வரும் தமிழக அரசுக்கு நன்றி.

    தகர சீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிகக் குடியிருப்புகளில் வசித்து வருகிறோம். இந்தக் குடியிருப்புகள் கோடைக்காலங்களில் அதிக வெப்பமாக உள்ளது. இதனால், உடல்களில் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.

    எனவே, கான்கிரீட் குடியிருப்புகளை கட்டித்தர தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். குடியிருப்புகளுக்குத் தேவையான தெருவிளக்கு வசதிகள், கழிவுநீர்க் கால்வாய் வசதிகளைச் செய்துதர வேண்டும்.

    இந்த முகாமில் புதிதாக இடம்பெயர்ந்து வந்தவர்கள், அகதிகள் முகாமில் பிறந்துள்ள குழந்தைகளுக்கு இன்னும் அரசுப் பதிவேடுகளில் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை.

    பிறப்புச் சான்று, பெயர்களைப் பதிவு செய்யவதற்காக அரசு அதிகாரிகளை நாடிச் செல்லும் போது அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, இலங்கையில் இருந்து உறவுகளைப் பிரிந்து வந்துள்ள எங்களுக்கு சான்றிழ்கள், பெயர்களைப் பதிவு செய்தல், மருத்துவ வசதி, குறைகளைத் தெரிவிக்கும் மக்கள் குறை கேட்பு முகாம்களை அரசு நடத்த வேண்டும் என்றனர் அவர்கள்.

    இதுகுறித்து அரூர் கோட்டாட்சியர் ஆர்.சந்திரசேகரனிடம் கேட்ட போது, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai