Enable Javscript for better performance
கரும்பு உற்பத்திக் குறைவால் தள்ளாடும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு உற்பத்திக் குறைவால் தள்ளாடும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை

    By தருமபுரி  |   Published on : 12th July 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவைப் பணிக்கு போதுமான அளவு கரும்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படத் தொடங்கியுள்ளதால், வரும்காலங்களில் அரைவைக் காலம் முழுவதிலும் ஆலை தடையின்றி இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதைத் தடுக்க, நீராதாரங்களை பெருக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    பாலக்கோட்டில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டுமானப் பணிகள் கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1974ஆம் ஆண்டு முதல் அரைவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் சுமார் 1,000 நிரந்தரத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது நிரந்தர ஊழியர்கள் 150 பேர் மற்றும் தினக் கூலி அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நாளொன்றுக்கு 2,000 டன் கரும்பு பிழிதிறன் கொண்ட இந்த ஆலை பயன்பாட்டுக்கு பாலக்கோடு மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு 60 முதல் 80 டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த கரும்புகள் ஆலைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு டன் கரும்பிலிருந்து 110 கிலோ சர்க்கரை, மொலாசஸ் உள்ளிட்ட இதரப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த ஆலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதக் கடைசியில் இருந்து ஜூன் மாதம் வரையில் 3 ஷிப்ட்கள் அடிப்படையில் அரைவைப் பணிகள் மூலம் சர்க்கரை உற்பத்தி நடைபெறும். இந்த நிலையில், கரும்புப் பயிருக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னாறு அணை கடந்த 7 ஆண்டுக்கு முன்பு நிரம்பியது. அதன்பிறகு எதிர்பார்த்த மழை இல்லாததால் அணை நிரம்பாததுடன் நிலத்தடி நீர்மட்டமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால், கரும்பு உற்பத்தி பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதுடன், சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலை தொடர்ந்தால் வரும்காலங்களில் ஆலை இயங்கும் காலம் பாதியாக குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்:

    போதுமான நீர் கிடைக்காததால் ஒசூர் அருகே கெலவரப்பள்ளியில் இருந்து உத்தனப்பள்ளி வழியாக புதிய கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அதேபோல, கிடப்பில் போடப்பட்டுள்ள தும்பலஅள்ளி நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஏரிகளைத் தூர்வாரி நீராதாரத்தைப் பெருக்கினால் மட்டுமே கரும்பு உற்பத்தி முழு அளவு சாத்தியமாகும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சர்க்கரை ஆலை சிஐடியூ தொழில்சங்கத் தலைவர் சி.ராமன் கூறியது:

    பாலக்கோடு சர்க்கரை ஆலையில் நிர்ணயிக்கப்பட்ட காலம் முழுவதும் தடையின்றி ஆலை இயங்க வேண்டுமெனில், கரும்பு உற்பத்தி செய்யப்படும் பரப்பளவை உறுதி செய்ய தேவையான நீராதாரம் கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், தனியார் ஆலைக்கு கரும்பு கொண்டு செல்லப்படுவதையும் தடுக்க வேண்டும். மேலும், 3 ஷிப்ட்டில் போதுமான அளவில் ஊழியர்கள் பணியாற்ற ஏதுவாக நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    தற்போது, கரும்பு உற்பத்தி குறைந்து எதிர்பார்த்த அளவு இல்லாததால் நிகழாண்டில் ஆலையின் அரைவைப் பணி டிசம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai