மனைவியுடன் தகராறில் இரு குழந்தைகள் சுவரில் அடித்துக் கொலை
By தருமபுரி | Published on : 13th July 2014 03:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே மனைவியுடன் தகராறில், இரு குழந்தைகளை தந்தையே சுவரில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரும்பாலை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார் (28). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கோகிலா (25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது குழந்தைகள் தமிழ்ச்செல்வன் (4), மோகனப் பிரியா (2), தெய்வானை (1).
மது அருந்தும் பழக்கமுடைய சதீஷ்குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த கோகிலா, தனது குழந்தைகளுடன் காவாக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.
இதையடுத்து, மாமனார் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற சதீஷ்குமார், குழந்தைகளுடன் வருமாறு மனைவியை அழைத்தாராம்.
இதற்கு கோகிலா மறுப்புத் தெரிவிக்கவே, குழந்தைகள் தமிழ்ச்செல்வன், தெய்வானை ஆகியோரைத் தூக்கிக் கொண்டு சதீஷ்குமார் தனது வீட்டுக்கு வந்தார்.
அப்போது, தாயிடம் செல்ல வேண்டும் எனக் கூறி குழந்தைகள் அழுததால், ஆத்திரமடைந்த சதீஷ்குமார், இரண்டு குழந்தைகளையும் சுவரில் அடித்தாராம். இதில் தமிழ்செல்வன், தெய்வானை ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, சதீஷ்குமார் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெரும்பாலை போலீஸார், குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரைக் கைது செய்தனர்.