Enable Javscript for better performance
ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    தருமபுரியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது ஒகேனக்கல். கர்நாடக மாநிலம், குடகுவிலிருந்து பல நூறு கி.மீட்டர் தொலைவு மலைகளுக்கிடையே பயணித்து வரும் காவிரி, அருவியாக தமிழகத்தில் கால்தடம் பதிக்கும் இடம்தான் ஒகேனக்கல்.

    "இந்தியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் ஒகேனக்கல் அருவியைக் காண தருமபுரி மாவட்டம் மட்டுமன்றி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து அருவியில் நீராடியும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்வது வழக்கம்.

    விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது. குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியதால், காலையிலிருந்தே அருவியில் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல் பிரதான அருவியில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும், தொங்கு பாலம் வழியாகச் சென்று 100 அடி உயரத்தில் ஆர்ப்பரித்தும் கொட்டும் அருவியின் அழகைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.

    மேலும், சினி அருவி, மினி அருவி, ஐந்தருவிப் பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    மேலும், ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் மீன் உள்ளிட்ட அசைவ உணவு உள்கொண்டு பரிசல் சவாரி செய்து அருவியின் அழகை ரசித்தனர்.

    இதுதவிர, அருவியில் உள்ள வண்ண மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை ஆகியவற்றை தங்களது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டனர்.

    பேருந்து நிலையம், ஊட்டமலை சாலை, அருவிக்குச் செல்லும் வழி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    பாதுகாப்பில்லா பரிசல் பயணம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசலில் சவாரி செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். அதேநேரத்தில், பாதுகாப்பு முன்னேற்பாடாக பரிசலில் செல்வோருக்கு லைஃப் ஜாக்கெட் அளிக்கப்படவில்லை.

    மேலும், தடை செய்யப்பட்ட சில பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    பரிசல் சவாரி செய்வோருக்கு லைஃப் ஜாக்கெட் அளித்து, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பரிசலில் அழைத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai