Enable Javscript for better performance
பேருந்து மோதி கல்லூரி மாணவர் காயம்: முறையான சிகிச்சைக் கோரி சாலை மறியல் - Dinamani

சுடச்சுட

    

    பேருந்து மோதி கல்லூரி மாணவர் காயம்: முறையான சிகிச்சைக் கோரி சாலை மறியல்

    By dn  |   Published on : 16th July 2014 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அருகே செவ்வாய்க்கிழமை பேருந்து மோதி காயமடைந்த பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சல்வாடியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவரது மகன் கவியரசன்(17). இவர் தருமபுரி அடுத்த பைசுஅள்ளி அருகேயுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில், மாணவர் கவியரசன் கல்லூரி முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்புவதற்காக பைசுஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, பெங்களூருவிலிருந்து தருமபுரி நோக்கி வந்த அரசுப் பேருந்து கவியரசன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாணவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சக மாணவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த மாணவர் கவியரசனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மருத்துமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக் கூறி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து, தகவல் அறிந்த நகர காவல் ஆய்வாளர் சுந்தராஜன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதில், மாணவர் கவியரசனுக்கு முறையான சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

    கல்லூரி மாணவர்களின் மறியல் போராட்டத்தால் தருமபுரி-சேலம் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேருந்து மோதி விபத்துக்குளான சம்பவம் குறித்து, காரிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai