Enable Javscript for better performance
மாதாந்திர சலுகை பேருந்து அட்டை பெற மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாதாந்திர சலுகை பேருந்து அட்டை பெற மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

    Published on : 16th July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    தருமபுரியில் மாதந்தோறும் வழங்கப்படும் சலுகை பேருந்து பயண அட்டை பெற ஏராளமான மாணவர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் நீண்ட தொலைவில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதாந்திர சலுகை பேருந்து பயண அட்டை அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல அலுவலகம் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. தருமபுரி நகர பேருந்து நிலைய வளாகத்தில் பிரதி மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரை பயண அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    பயண அட்டை வழங்க வேண்டிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலதாமதாக 9 மணிக்கு வந்ததால், பேருந்து அட்டை பெறுவதற்கான கடைசி நாள் என்பதால் காத்திருந்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன்காரணமாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேருந்து அட்டை பெறுவதற்காக வந்துள்ள அனைவருக்கும் விநியோகிக்கப்படும் என போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் மாலை வரை வரிசையில் காத்திருந்து பேருந்து அட்டை பெற்றுச் சென்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறியது: ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்துக்கு ஊழியர்கள் திறப்பதில்லை. இதன்காரணமாக நீண்ட தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல முடியாத அவலம் தொடர்கிறது. எனவே, வரும்காலங்களிலாவது குறித்த நேரத்தில் திறப்பதோடு, மாணவர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு கூடுதல் நேரம் வரை விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai