Enable Javscript for better performance
நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சல்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கவியரசு (17). இவர் தருமபுரியை அடுத்துள்ள பைசுஅள்ளி அருகேயுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக பைசுஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவிலிருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த கவியரசு உயிரிழந்தார்.

    இறந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்லூரிக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, கல்லூரியில் இருந்து 500-க்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆட்சியர் இல்லாததால், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேல் மாணவர்களைச் சந்தித்தார். அப்போது, காலை, மாலை வேளைகளில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பேருந்துகளை நிறுத்த வேண்டும்.

    போக்குவரத்து போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இறந்த மாணவரின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    வருகிற ஜூலை 24ஆம் தேதி ஆட்சியரகத்தில் போக்குவரத்துத் துறை தொடர்பாக நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் கோரிக்கை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, முக்கால் மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்தச் சம்பவத்தால் ஆட்சியரகத்தில் பரபரப்பு நிலவியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai