Enable Javscript for better performance
தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் தீவிரம்

    By தருமபுரி,  |   Published on : 18th July 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், தும்பலஅள்ளியில் இலங்கை அகதிகள் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் இன்னும் 20 நாள்களில் நிறைவடையும் எனத் தெரிகிறது.

    புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் கழிவறை வசதி ஏற்படுத்துவது குறித்து இதுவரையில் முடிவெடுக்கப்படவில்லை. எனவே, கழிவறைகள் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை அகதிகள் வலியுறுத்தினர்.

    தருமபுரி மாவட்டத்தில் மதிகோன்பாளையம், தும்பலஅள்ளி, சின்னாறு அணை, பெல்ராம்பட்டி, தொப்பையாறு, நாகாவதி அணை, வாணியாறு ஆகிய 7 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 600-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இவர்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட தாற்காலிக குடியிருப்புகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இவர்களின் நிலை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாக முகாம்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதில், காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட தும்பலஅள்ளி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 150 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் 17-க்கு 10 அளவில் கட்டப்படுகின்றன. குடியிருப்பின் மேல்தளம் பருவநிலைகளைத் தாங்கும் வகையில் "சீட்' அமைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அகதிகளுக்கு இலவசமாக அளிக்கப்படவுள்ள இந்தக் குடியிருப்புப் பணிகள் இன்னும் 20 நாள்களில் நிறைவு செய்யும் நடவடிக்கையில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பணிகள் முழுமையடைந்ததும் வருவாய்த் துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

    இந்தக் குடியிருப்புகளில் வசிக்க இருப்பவர்கள் அன்றாடம் பயன்படுத்த கழிவறை வசதி ஏற்படுத்தப்படாததால் அருகே உள்ள தும்பல அள்ளி அணைப் பகுதியை திறந்தவெளி கழிவறையாகப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    எனவே, கட்டடப் பணிகளை நிறைவு செய்து உரியவர்களுக்கு குடியிருப்புகளை ஒப்படைக்கும் முன்னதாக கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என இலங்கை அகதிகள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்து காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பொறியாளரிடம் கேட்ட போது, தும்பலஅள்ளி குடியிருப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் 20 நாள்களில் நிறைவு பெற்று விடும். அதன்பிறகு வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு இலங்கை அகதிகளிடம் குடியிருப்புகள் ஒப்படைக்கப்படும்.

    இங்கு வசிக்க உள்ளவர்களுக்கு தனித்தனியாக கழிவறை கட்டுவதா, பொதுக் கழிவறை கட்டுவதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதால்தான் இதுவரையில் கழிவறைகள் கட்டப்படவில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai