போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை
By தருமபுரி, | Published on : 18th July 2014 03:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையம் முன் சடலத்துடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் (27). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் தருமபுரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவர் அந்தக் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில நாள்களுக்கு முன்பு கடத்திச் சென்றாராம்.
இதுகுறித்து, அந்தப் பெண்ணின் பெற்றோர் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், தொப்பூர் போலீஸார் சந்தானம் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சந்தானம் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றாராம்.
இந்த நிலையில், அவர் சூரமங்கலல்தில் புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த, சந்தானத்தின் உறவினர்கள், தொப்பூர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரைத் துன்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி, சடலத்துடன் தொப்பூர் காவல் நிலையத்தை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் தொப்பூர் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த சந்தானத்தின் சடலத்தை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இளைஞர் சந்தானத்தின் உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்ய தொப்பூருக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
இதில், முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.