Enable Javscript for better performance
அரூரில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

    By அரூர்  |   Published on : 21st July 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அரூரில் வனத் துறையினரைக் கட்டிப்போட்டு சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற கும்பலை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    அரூரில் மாவட்ட வன அலுவலர் வளாகத்தில் வனச் சரகர் அலுவலகம் (அரூர்) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் சந்தன மரங்களைப் பாதுகாக்கும் இரவுக் காவல் பணியில் வனத் துறையைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் சி.சுரேஷ் (43), வனக் காப்பாளர் சின்னத்தம்பி (54), வனக் காவலர் தேவராஜுலு (54) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    கடந்த ஜூன் 12-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அரூர் வனச் சரகர் அலுவலக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் இரவுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களைத் தாக்கிவிட்டு, அலுவலக வளாகத்தில் இருந்த 2 சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றனர்.

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், சேலம் மாவட்டம், புழுதிக்குட்டையைச் சேர்ந்த ராஜி, ஏற்காடு ஒன்றியம், மாவூத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 12-க்கும் மேற்பட்டோர் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, மாவூத்தைச் சேர்ந்த நாகன் மகன் தங்கராஜ் (26), கேளையூரைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் லோகேஷ் (25), அதே பகுதியைச் சேர்ந்த சுதர்சன் மகன் ஜீல்ஜு (37), சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டையைச் சேர்ந்த ஏழுமலை மகன் துரைசாமி (32) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகன் மகன் ராஜேந்திரன், மாரி மகன் வரதராஜன், சென்னப்பன் மகன் பெருமாள் ஆகிய 3 பேரும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வாழப்பாடியைச் சேர்ந்த மாரி மகன் அறிவழகனை (21) வனத் துறையினர் பிடித்து தனிப் படை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai