Enable Javscript for better performance
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

    நீர்வரத்து சீராக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம்

    53 அடியாக உயர்ந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாள்களாக உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    வெள்ளிக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. நீர்வரத்து சனிக்கிழமை நொடிக்கு 19 ஆயிரம் அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. எனவே, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டது.

    பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், பரிசல் ஓட்டிகளும் பரிசல்களை இயக்கவில்லை.

    ஒகேனக்கல் அருகேயுள்ள காமராஜ் நகர், ஊட்டமலை உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    உயரும் மேட்டூர் நீர்மட்டம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 19,829 கன அடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை 47.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 53.06 அடியாக உயர்ந்தது. கடந்த இரு நாள்களில் மட்டும் நீர்மட்டம் 5.12 அடி உயர்ந்தது.

    குடிநீர்த் தேவைக்காக அணையில் இருந்து நொடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 19.79 டி.எம்.சி.யாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai