மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட உதவித் தொகையை வழங்க வலியுறுத்தல்
By தருமபுரி, | Published on : 21st July 2014 03:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநிலத் துணைத் தலைவர்கள் டி.லட்சுமணன், கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில இணைச் செயலாளர் பி.ஜீவா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக எவ்வித காரணமும் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள், விதவை, முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களாக உள்ள மாற்றுத் திறனாளிகளை அவர்களது வசிப்படங்களுக்கு அருகில் பணி அமர்த்த வேண்டும். ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான விதிகளைப் பின்பற்றாத கல்வித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடையாள அட்டை உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.