Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டம்: தருமபுரியில் 453 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் கூட்டம்: தருமபுரியில் 453 மனுக்கள் அளிப்பு

    By தருமபுரி  |   Published on : 22nd July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 453 மனுக்கள் ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளிக்கப்பட்டன.

    இருமத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு: இருமத்தூர் ஊராட்சித் தலைவர், ஆழ்துளைக் கிணறு அமைக்காமல் அமைத்தது போல நிதியை முறைகேடாகச் செலவழித்தார்.

    அதேபோல, தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி இல்லாமல் அதை வைத்தது போல ஊராட்சி நிதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளும் ஊராட்சித் தலைவரின் மகன் பெயரில் உள்ள கட்டுமான நிறுவனகத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என இருமத்தூர் ஊராட்சிக்குள்பட்ட கொன்றாம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.

    சாலையைப் புதுப்பிக்கக் கோரி மனு: தருமபுரி அருகே நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட மாதேமங்கலம் ஊராட்சியில் வெங்கட்டம்பட்டி கிராமத்தில் உள்ள சாலை கடந்த ஏப்ரல் மாதம் செப்பனிடுவதற்காகத் தோண்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் காரணமாக சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகும் இந்தச் சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

    இதனால், இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன.எனவே, இந்தச் சாலையை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    ஊராட்சி களப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்: தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். படித்த தகுதியுள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு, அனைவருக்கும் ஓய்வூதியம், வாரிசு பணி ஆகியவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி களப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு: தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்கலைக்கழகங்களில் பணி புரியும் அனைவரும் 60 வயது வரை பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2013-ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஊழியர், ஆசிரியர்களுக்கு பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் மானியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

    உயர் பதவிகளுக்கு புதிதாகக் கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யும் அரசு ஆணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோரிக்கை மனு ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai