Enable Javscript for better performance
இளம்பெண் விஷமருந்த காரணமாக இருந்த காதலன் கைது- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் விஷமருந்த காரணமாக இருந்த காதலன் கைது

    By தருமபுரி  |   Published on : 24th July 2014 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் திருமணம் செய்ய மறுத்ததுடன், ஆபாசப் படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டி இளம்பெண் விஷம் குடித்ததுக்கு காரணமாக இருந்ததாக காதலனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பை படித்து வந்தார். அப்போது உடன் படித்த மதுரையைச் சேர்ந்த தீபக் (22) அவரை காதலித்தாராம். இதில் கர்ப்பமடைந்த அந்த இளம் பெண்ணிடம் பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்வதாகக் கூறி, கருவைக் கலைக்க வைத்தாராம். தொடர்ந்து, அந்தப் பெண் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால், இருவரும் தனிமையில் இருந்த ஆபாசப் படத்தை வெளியிவேன் என தீபக் மிரட்டினாராம்.

    இதற்கு பயந்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி வீட்டில் விஷமருந்திய அந்த இளம்பெண் மீட்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த காதலன் தீபக்கை புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்பேசி, லேப்டாப்பை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    இளநிலை உதவியாளரிடம்ரூ.ஒரு லட்சம் பறிப்பு

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் இளநிலை உதவியாளரிடம் ரூ.ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றது குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக கோவிந்தசாமி மகன் தமிழரசு பணிபுரிகிறார். இவர் கடந்த 4-ஆம் தேதி, அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் கூட்டுறவு, சிக்கன, அஞ்சல் சேமிப்புத் தொகையைச் செலுத்துவதற்காக பாப்பிரெட்டிப்பட்டி இந்தியன் வங்கிக்கு சென்றாராம்.

    அப்போது, வங்கி அருகே நின்றிருந்த இளைஞர்கள் 2 பேர் கீழே பணம் கிடப்பதாகக் கூறினராம். அப்போது தரையில் இருந்த பணத்தை அவர் எடுத்த போது, அவரது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் ரூ.1,00,200-ஐ எடுத்துச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுப்பு வெடித்து இளம்பெண் சாவு:கணவர் பலத்த காயம்

    அரூர், அரூர் அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தார். கணவர் பலத்த காயமடைந்தார்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.கோபிநாதம்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சுரேஷ் (30). இவரது மனைவி பூங்கொடி (26). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், பூங்கொடி செவ்வாய்க்கிழமை வீட்டில் சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைத்தாராம். அப்போது, அடுப்பில் மண்ணெண்ணெய் கசிவு இருந்ததால் வெடித்ததாம். இதில், பூங்கொடி, கணவர் சுரேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூங்கொடி சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். அவரது கணவர் சுரேஷ் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே போலி மருத்துவர் கைது

    ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகே மருந்துக் கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததாக போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). இவர் டி பார்ம் படித்துவிட்டு அனுமன்தீர்தத்தில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவர் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு மருத்துவர் எனக் கூறி மருத்துவம் பார்த்தாராம். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் காவல் ஆய்வாளர் அருள்முருகன் தலைமையிலான போலீஸார் கார்த்திகேயன் மருந்துக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில், அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்ததால், அவரை கைது செய்தனர். மேலும், மருந்துக் கடையில் இருந்த மருந்து, மாத்திரைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai