Enable Javscript for better performance
பாப்பாரப்பட்டி நினைவிடத்தில் ஆட்சியர் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    பாப்பாரப்பட்டி நினைவிடத்தில் ஆட்சியர் அஞ்சலி

    By தருமபுரி,  |   Published on : 24th July 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 89-ஆவது நினைவு நாளையொட்டி, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    1984-ஆம் ஆண்டு, அக்டோபர் 4-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சுப்பிரமணிய சிவா பிறந்தார்.

    திருவனந்தபுரத்தில் அன்னசத்திரத்தில் மேல்படிப்பை படித்தார். 1906-இல் திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஸ்ரீநாகூர்கான் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    பிரிட்டிஷாரால் சிறையிலடைக்கப்பட்டிருந்த போது, தருமபுரி, பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சுதந்திரப் போரட்ட தியாகிகள் அறிமுகம் கிடைத்தது.

    இதையடுத்து, தருமபுரி மாவட்டத்துக்கு வந்த சிவா பாரத மாதா கோயில் கட்ட 1923-இல் பாப்பாரப்பட்டி சண்முக முதலியாரிடம் 6 ஏக்கர் 21 சென்ட் நிலத்தை வாங்கினார். அந்த இடத்துக்கு பாரதபுரம் என பெயர் சூட்டப்பட்டது.

    கடந்த 23.7.1925 அன்று தனது 41-ஆவது வயதில் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா உயிரிழந்தார். அவரது உடல் அவர் வாங்கிய நிலமான பாரதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கடந்த 18-11-2011 அன்று அவருக்கு நினைவு மண்டபம் கட்டி திறக்கப்பட்டது.

    சுப்பிரமணிய சிவாவின் நினைவுநாளையொட்டி, பாரதபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவாவின் நினைவிடம், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் தியாகி பஞ்சாட்சரம், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், வட்டாட்சியர் தேவிகா மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai