Enable Javscript for better performance
மலையூருக்கு சாலை அமைக்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள மலைக் கிராமமான மலையூருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட மலைக் கிராமம் மலையூர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,300 அடி உயரமுள்ள இந்த மலைக் கிராமத்தை ஒட்டி வரக்கொள்ளை, பெரிய கொள்ளை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்தக் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மலைப் பகுதியில் உள்ள இந்தக் கிராமங்களுக்கு செல்ல சுமார் 65 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவித்து வந்தனர். இந்தக் கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு மலைப் பகுதியில் சுமார் 15 கி.மீ. தொலைவு கரடு, முரடான மலைப் பாதையில் பாப்பாரப்பட்டிக்கு நடந்து வந்து சென்றனர். மேலும், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தலையில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர். பொருள்களின் சுமை அதிமாக இருந்தால் கழுதைகள் மூலம் எடுத்துச் சென்றனர்.

    மருத்துவத் தேவைகளுக்கு கட்டிலில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை எடுத்து வந்தனர்.

    மலையூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.

    சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்தக் கிராமங்களுக்கு தார்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என மலை கிராம மக்கள், அரசியல் கட்சியினர், பிற அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

    இதையடுத்து, மலையூருக்குச் செல்ல அரசு தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. தற்போது, ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், சுமார் ரூ.6 கோடியில் பாப்பாரப்பட்டி காந்தி நகரில் இருந்து மலையூர் வரை சுமார் 13 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    7.5 மீ. அகலம் அமைக்கப்படும் இந்தச் சாலையில் 19 சிறு பாலங்கள், தரைப் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புச் சுவர் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் பணி வருகிற செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி முடிவடைய உள்ளது.

    சுமார் 65 ஆண்டுகளாக சாலையின்றி கால்நடைகளாக நடந்து அவதிப்பட்டு வந்த மலைக் கிராம மக்களுக்கு தார்ச் சாலை கனவு விரைவில் நனவாக உள்ளதால் மலையூர் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai