Enable Javscript for better performance
டி.அம்மாபேட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    டி.அம்மாபேட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் அவதி

    By அரூர்  |   Published on : 25th July 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூரை அடுத்த டி.அம்மாபேட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அரூர் ஒன்றியம், வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்டது டி.அம்மாபேட்டை கிராமம். இந்தக் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தின் குடிநீர்த் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.

    ஆனாலும், டி.அம்மாபேட்டை வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், அந்தப் பகுதியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அரூரில் இருந்து 27 கி.மீட்டர் தொலைவில் உள்ள டி.அம்மாபேட்டை கிராம மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், இந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டன.

    ஆனால், இதுநாள் வரை அந்தப் பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் (அரூர்) கே.ராஜு கூறியது: ஆண்டியூரில் இருந்து டி.அம்மாபேட்டை செல்லும் குடிநீர் குழாய் இணைப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாபேட்டை பகுதிகளில் குடிநீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது, குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களில் டி.அம்மாபேட்டை கிராம மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai