Enable Javscript for better performance
உயிருடன் உள்ளவருக்கு இறப்புச் சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ராணுவத்தில் பணியாற்றி வருபவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டவர்த்தியைச் சேர்ந்த காளியப்பன் மகன் மகன் கிருஷ்ணன் (27). இவர் இந்திய ராணுவத்தில் (வெடிகுண்டு பிரிவு) பணிபுரிகிறார்.

    இவர் கடந்த 28.07.2012-இல் இறந்து விட்டதாக நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கா.கிருஷ்ணன் அரூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

    நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 6.6.2011-இல் பட்டவர்த்தியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் சின்னசாமி இறப்பு தொடர்பாக, அ.பள்ளிப்பட்டி போலீஸார் கொலை வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் எனது பெயரும், எனது சகோதரர்கள் ராமு, பாலு, தாய் மீனாட்சி, உறவினர் வளர் (எ) வளர்மதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொலைச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ள தேதியில் நான் ஜம்மு- காஷ்மீரில் ராணுவத்தில் பணியில் இருந்தேன். ஆனால், நான் சொந்த ஊரில் இருந்ததாக என் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நான் ராணுவத்தில் இருந்ததால், எனக்குப் பதிலாக எனது மூத்த சகோதரர் கோவிந்தசாமியை ஆள்மாறட்டம் செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது இறப்பு குறித்து தென்கரைக்கோட்டை வருவாய் ஆய்வாளர், நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உரிய விசாரணை செய்து இறப்புச் சான்றிதழ் வழங்கினர்.

    இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சின்னசாமி கொலை வழக்கு தொடர்பாக, அண்மையில் எங்கள் குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதில் நான் கடந்த 28-7-2012-இல் உயிரிழந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், அதே தேதியில் எனது சகோதரர் கோவிந்தசாமி இறந்து விட்டதாகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உயிருடன் இருக்கும் எனக்கு உரிய விசாரணை இல்லாமல் இறப்புச் சான்றிதழை நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கியுள்ளார்.

    அதேபோல, ராணுவப் பணியில் உள்ள என்னை கொலை வழக்கிலும் சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணன்.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., அரூர் கோட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் மனுக்களை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

    இறப்புச் சான்றிதழ் விவகாரம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் எம்.ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, எனது பணிக் காலத்தில் இந்த இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai