Enable Javscript for better performance
காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 26th July 2014 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசியது: விளை நிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்.

    வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்களை காக்க முள்வேலி அமைக்க 90 சத மானியம் வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டம், திப்பம்பட்டி அருகே உள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஈக்களை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பருவதனஅள்ளி புதூர் பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொம்மிடியிலிருந்து தொப்பூர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். நிம்மாங்கரையில் உபரிநீர் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் நிலுவையிலுள்ள தொகையை வழங்க வேண்டும். பயிர்க் கடனை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பதிலளித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க முறைப்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், கோழிப் பண்ணையிலிருந்து வெளியேறும் ஈக்களை கட்டுப்படுத்துவது தொடர்க ஓரிரு நாள்களில் பண்ணை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். தெருநாய்கள், குரங்குகள் பொதுமக்களுக்கு அளிக்கும் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதியில் கால்வாய் நீட்டிப்புக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படும். மொரப்பூர் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

    பருவதனஅள்ளி புதூரில் ஆக்கிரமிப்பில் உள்ள சாலையை மீட்க ஏற்கெனவே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், இந்தப் பணிகளை மேற்கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலரைப் பணியிட மாற்றம் செய்யவும், துணை வட்டாட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கணினியில் விவசாயம், சாகுபடி குறித்து விவரங்களை அறியும் வகையிலான புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதுதொடர்பான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, வேளாண், தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியில் துறை சார்பில் விவசாயக் கருவிகளின் இயக்கம், பயன்பாடு குறித்து கண்காட்சி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai