ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
By தருமபுரி, | Published on : 28th July 2014 03:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால், அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர், கடந்த 18-ஆம் தேதி தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை வந்தடைந்தது.
இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் கூடுதல் தண்ணீரால் அருவியில் உள்ள பாறைகள் அனைத்தும் மூழ்கிய நிலையில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அருவிக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 39 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சற்று அதிகரித்து நீர்வரத்து நொடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இதனால், பாதுகாப்பு கருதி தொடர்ந்து 10-ஆவது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்ட சுற்றுலாப் பயணிகள்: ஒகேனக்கல் அருவிக்கு கடந்த 10 நாள்களாக கூடுதல் தண்ணீர் வருகிறது. இதனால், பாதுகாப்புக் கருதி பயணிகள் குளிக்க, பரிசலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதை அறியாத சுற்றுலாப் பயணிகள் சிலர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருவியில் குளிக்க வந்திருந்தினர். இவர்களை போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பயணிகள் பெருத்த ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.