Enable Javscript for better performance
அரூர் அருகே இருதரப்பினர் மோதல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பழையக்கொக்கராப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோகுல் (18). இவர் நண்பர்களுடன் அங்குள்ள வேடியப்பன் கோயில் பகுதியில் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீடு திரும்பினாராம்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த இளந்தமிழன் மோட்டார் சைக்கிளில் வந்தாராம். அவர் கோகுல் மீது மோட்டார் சைக்கிளை மோதுவதுபோல வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவர்கள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த பிரச்னைக்கு பிறகு வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் கோகுல் மீது அதே ஊரைச் சேர்ந்த பில்லா (எ) நவீன், கார்த்திக், தீபரசு, இளந்தமிழ், சபரீஷ் உள்ளிட்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதேபோல, பழையக்கொக்கராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் தலைமையில் வந்த ஒரு கும்பல் இளந்தமிழன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

    இந்தத் தகராறில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல் வீசித் தாக்கிக் கொண்டனராம். கல் வீசியதில் குடியிருப்புகளின் ஓடுகள், அட்டைகள் சேதமடைந்தன.

    இருவேறு சமூகத்தினர் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோதல் சம்பவம் குறித்து பழையக்கொக்கராப்பட்டி ஊராட்சித் தலைவர் ல.நரசிம்மன் (46), அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜ மாணிக்கம் (56), சின்னசாமி மகன் கோகுல் (18) ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், இருதரப்பினரையும் சேர்ந்த அடையாளம் தெரிந்த, பெயர் மற்றும் முகவரி தெரியாத 50-க்கும் மேற்பட்டோர் மீது அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கில் பழையக்கொக்கராப்பட்டியைச் சேர்ந்த பழனி மகன் தீபக்குமாரை (27) போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai