Enable Javscript for better performance
தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்- Dinamani

சுடச்சுட

    

    எய்ம்ஸ் மருத்துவமனையை தருமபுரி தொகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

    தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதி பொது பிரச்னைகளை நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ இந்த அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இங்கு 24 மணி நேரமும் மக்களைச் சந்திக்கக் கூடிய வகையில் உதவியாளர்கள் இருப்பர்.

    மேலும், பொதுமக்கள் 04342-270001 என்ற தொலைபேசியிலும், 94432 62062 என்ற செல்போனிலும் தொடர்பு கொள்ளலாம். பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் கிளை அலுவலகம் திறக்கப்படும்.

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மருத்துவமனையை தருமபுரி தொகுதியில் அமைக்க வேண்டும். இதன்மூலம் பின்தங்கிய இந்த மாவட்டத்துடன் வளர்ச்சிபெறும் ஆறு மாவட்ட மக்களும் பயனடைவர். இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளேன். இதில், ரூ. 1500 கோடியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் மருத்துவம், மருத்துவக் கல்வி கிடைக்கும்.

    நடைபெற்றுவரும் மக்களவைக் கூட்டத் தொடர் முடிந்ததும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்படும். தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை வீணாக ஆற்றில் கலக்காமல் அவை விவசாயிகள், பொதுமக்களுக்குப் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்தப் பகுதிக்கு பாஸ்போர்ட் துணை மையம் அமைக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மத்திய வேளாண்மைத் துறையின் வறட்சி பயிர் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.

    எனது முதல் பணி: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய ரயில் திட்டங்கள் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே என் வருத்தத்தை மக்களவையில் பதிவு செய்துள்ளேன்.

    தருமபுரியின் வளர்ச்சிக்குத் தேவையான மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதைத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வைப்பதே எனது முதல் பணியாகும்.

    கல்விக் கடன் கோரும் அனைத்து மாணவர்களுக்கும் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும்.

    கடன் வழங்க மறுத்தால், விரைவில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.

    மகளிர் பேருந்து: பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல், பாலியல் பலாத்காரம் பெருகிவிட்டது. அதைத் தடுக்கும் விதத்தில் தருமபுரியில் மகளிருக்கு என தனிப் பேருந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொன்டார்.

    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி.க்கள் ஆர்.செந்தில், பாரிமோகன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai