Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டம்: தருமபுரியில் 454 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் கூட்டம்: தருமபுரியில் 454 மனுக்கள் அளிப்பு

    By தருமபுரி,  |   Published on : 29th July 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, குடிநீர், மின் வசதி, வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 454 மனுக்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் அளித்தனர்.

    கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கக் கோரி மனு: தருமபுரி மாவட்டம், தொங்கனூரில் உள்ள கே.கே.260 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு பயிர்க் கடன் வழங்கக் கோரி நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சங்கத் தலைவரால் கையொப்பம் இடப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க மறுக்கிறார்.

    எனவே, கடன் வழங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொங்கனூர் கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

    கைது செய்யப்பட்டுள்ள தந்தையை விடுவிக்கக் கோரி மனு: தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே சுண்டகாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவரது 5-ஆவது பெண் குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு இறந்து விட்டது. இதுதொடர்பாக மொரப்பூர் போலீஸார் பெண் குழந்தையைக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், குமாரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

    இதனால் பெற்றோர் இன்றி தவித்து வருவதாகவும், எனவே, தங்களது நலன் கருதி சிறையில் உள்ள தனது தந்தை குமாரை விடுவிக்கக்கோரி அவரது குழந்தைகள் 4 பேரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    கல்விக் கடன் கோரி மனு: தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கீழ் மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.அஜித்குமார் என்ற மாணவர் அளித்த மனுவிவரம்: கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1148 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    இந்த நிலையில் 165.5 மருத்துவ படிப்புக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற எனக்கு, திருச்சி மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்தது. எனினும், தந்தை இன்றி, தாயாருடன் வறுமையில் வாழ்ந்து வரும் எனக்குப் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இதுவரை கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலையில் உள்ளேன். எனவே, எனக்கு வங்கி மூலம் கல்விக் கடன் வழங்கி மருத்துவம் பயில உதவ வேண்டும் என ஆட்சிரிடம் மனு அளித்தார்.

    இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் மூவருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், முன்னோடி வங்கி மேலாளர் எம்.முத்தரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai