Enable Javscript for better performance
அரசநத்தத்தில் உண்மை கண்டறியும் குழு இரண்டாவது நாளாக விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    அரசநத்தத்தில் உண்மை கண்டறியும் குழு இரண்டாவது நாளாக விசாரணை

    By அரூர்,  |   Published on : 17th April 2015 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் உண்மை கண்டறியும் குழுவினர் வியாழக்கிழமை 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

    ஆந்திர வனப் பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சி, அரசநத்தத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ஹரிகிருஷ்ணன் (52), மாரி மகன் வெங்கடேசன் (23), தீர்த்தகிரி மகன் தீ.லட்சுமணன் (23), சித்தன் மகன் சிவக்குமார் (37), லட்சுமணன் மகன் லட்சுமணன் (41), கருக்கம்பட்டி பூச்சி மகன் சிவலிங்கம் (42), ஆலமரத்துவளவு ஆண்டி மகன் வேலாயுதம் (25) ஆகியோர் உயிரிழந்தனர்.

    துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். உண்மை அறியும் குழுவில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பா.கல்விமணி, சமூக ஆர்வலர் கொ.வேடியப்பன், மனித நேய மக்கள் கட்சி புதுச்சேரி மாவட்டச் செயலர் என்.எஸ்.கே.அப்துல் சமது, வழக்குரைஞர் பெ.தமயந்தி, பேராசிரியர் செ.கோச்சடை, ஜனநாயகத் தொழில் சங்க மையக் குழு உறுப்பினர் வ.ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    அரசநத்தம் கிராம மக்களிடம் நடத்திய விசாரணை குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் ஒருவர்கூட மரம் வெட்டும் தொழிலுக்குச் சென்றவர்கள் இல்லை. பிழைப்புக்காக வேலை தேடி ஆந்திர மாநில எல்லைக்குச் செல்லும் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துச் சென்று அந்த மாநில போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

    தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும் சித்தரவதைக்குப் பிறகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, ஆந்திரத்தில் தமிழகத் தொழிலாளர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

    சித்தேரி ஊராட்சி அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்து வளவு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. அரசநத்தம் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் படிக்கும் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இந்தக் கிராமங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai