Enable Javscript for better performance
வறண்டது ஒகேனக்கல்: கோடையைச் சமாளிக்குமா கூட்டுக் குடிநீர்த் திட்டம்?- Dinamani

சுடச்சுட

    

    வறண்டது ஒகேனக்கல்: கோடையைச் சமாளிக்குமா கூட்டுக் குடிநீர்த் திட்டம்?

    By தருமபுரி  |   Published on : 17th April 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியாற்றில் வரும் நீர் குறைவாக இருப்பதால், இரு மாவட்டங்கள் பயன்பெறும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் ஒகேனக்கல் குடிநீர் கோடைகாலம் முழுமைக்கும் தடையின்றி கிடைக்குமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    காவிரி நீரை நம்பித் தான் தமிழகத்தின் நெல்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் விவசாயப் பணிகள் மட்டுமல்லாது, குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

    மழைக் காலங்களில் காவிரியில் நீர் கிடைத்துவரும் நிலையில், கோடைக் காலத்தில் குறைவான அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால், தமிழக மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவது தொடர்கதையாகி விட்டது.

    கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமான நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் ஒகேனக்கல் காவிரியாற்றின் இரு கரைகளையும் ஆர்ப்பரித்துச் சென்றதால், அந்தாண்டு மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

    நிகழாண்டில் கடந்த 2 மாதங்களாக ஒகேனக்கல் காவிரியாற்றில் அதிகபட்சமாக 1,000 கன அடியும், அதற்கும் குறைவாகவே நீர் வரத்து உள்ளது. தற்போது 600 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

    இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகளாகக் காட்சியளிக்கின்றன. இந்த நீரை நம்பி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மட்டும் பயன்பெறும் நோக்கில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இத் திட்டத்தால் இரு மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஒன்றியங்களில் வசிக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இதில் நகராட்சிப் பகுதியில் நபருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டரும், பேரூராட்சிகளுக்கு 70 லிட்டர், ஊராட்சிப் பகுதிகளில் 40 லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 160 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கும் வகையில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இரு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகிக்க நாளொன்றுக்கு 120 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் காவிரியாற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.

    காவிரியாற்றில் 100 முதல் 150 கன அடி தண்ணீர் சென்றால், சிரமமின்றி ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக விநியோகம் செய்து விட முடியும். ஆனால், காவிரியாற்றில் நீரின் அளவு வரும் நாள்களில் படிப்படியாகக் குறைந்தால், குடிநீர்ப் பிரச்னை ஏற்படுமோ என்ற அச்சம் இரு மாவட்ட மக்களிடமும் காணப்படுகிறது. இதுகுறித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட அதிகாரிகள் கூறியது: ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 மாதங்களாக குறைந்த அளவு நீர் தான் வந்து கொண்டிருக்கிறது.

    ரூ.1,928 கோடி மதிப்பிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க நாளொன்றுக்கு 120 மில்லியன் லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது. இதற்கு காவிரியாற்றில் 100 முதல் 150 கன அடி தண்ணீர் இருந்தால் போதுமானது.

    கரைபுரண்ட ஒகேனக்கல் காவிரி ஆறு, தற்போது பாறைகளாகக் காட்சியளித்தாலும், கிடைத்துவரும் நீரில் இருந்து கோடையில் குடிநீர்ப் பிரச்னையை முழுமையாகச் சமாளித்து விட முடியும் என்கின்றனர்.

    அணைகளால் ஒகேனக்கல் திட்டம் பாதிக்கும் அபாயம்

    தற்போது வரை கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் முழுவதும் காவிரி ஆற்றின் வழியாக ஒகேனக்கல் வந்தடைவதால், பாதிப்பு பெரிதளவில் தெரிவதில்லை.

    தமிழகம் பயன்பெறும் வகையில் காவிரியில் திறந்து விடப்படும் நீரை முற்றிலும் தடுக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டால், காவிரியில் திறக்கப்படும் உபரி நீர் முழுவதும் மேற்கண்ட அணைகளுக்குச் சென்று விடும் என்பதால், கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஒகேனக்கல் வர வாய்ப்பில்லாமல் போய்விடும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், இரு மாவட்ட மக்கள் பயன்பெறும் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai