Enable Javscript for better performance
தருமபுரியில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் குடியரசு தின விழா திங்கள்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    கூக்குட்டமருதஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிராம கல்விக் குழுத் தலைவி நாகம்மாள் தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் முல்லைவேந்தன், அண்ணாமலை, ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம கல்விக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டுரங்கன் தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் ஆர்.சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். உதவி ஆசிரியர் பி.சசிகலா நன்றி கூறினார்.

    தருமபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுசாமி தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை பார்வதி, மகாத்மா காந்தி நற்பணி மன்ற மனித வள மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் பரமேசுவரன், மாவட்டத் தலைவர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உதவி ஆசிரியை லதா நன்றி கூறினார்.

    மாட்டியாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செல்லியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி ராசாத்தி கந்தசாமி தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

    உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.சின்னமாது, தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் அருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றுகள் அளிக்கப்பட்டன. பள்ளிப் பணிகளைச் சிறப்பாக செய்து வரும் அறிவியல் ஆசிரியர் எம்.ராமனுக்கு சிறந்த ஆசிரியருக்கான பரிசு அளிக்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

    வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் கே.ராமஜெயம் ஏற்றினார். தலைமை ஆசிரியர் கோ.குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கே.பானுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளியில் குடியரசு தின விழா, உணவுத் திருவிழா நடைபெற்றது. பள்ளித் தலைவர் என்.ராஜேந்திரன் தேசியக் கொடி ஏற்றினார். செயலர் சபிதா, முதல்வர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உணவுத் திருவிழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் தேசியக் கொடியை மாவட்ட நூலக அலுவலர் து.சின்னத்தம்பி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

    முதல் நிலை நூலகர் பே.ராஜேந்திரன், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ஆனந்தி, இரண்டாம் நிலை நூலகர்கள் சீ.சித்ரா, கோ.மாதேஸ்வரன், நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai