Enable Javscript for better performance
வனத் துறை பணிக்கு விண்ணப்பங்கள் தட்டுப்பாடு - Dinamani

சுடச்சுட

    

    வனத் துறை பணிக்கு விண்ணப்பங்கள் தட்டுப்பாடு

    By  தருமபுரி,  |   Published on : 28th January 2015 02:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வனத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தட்டுப்பாட்டால் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை இளைஞர்கள் பரிதவித்தனர்.
     தமிழகத்தில் வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர்கள், கள உதவியாளர்கள், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்கள், மாவட்டத் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ரூ. 60 அளித்துப் பெற்றுக் கொண்டு அவற்றை நிரப்பி, தேர்வுக் கட்டணத்துடன் விண்ணப்பங்களை மீண்டும் அஞ்சல் துறை மூலம் வருகிற 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
     இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி முதல் இந்த விண்ணப்பங்கள் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
     ஆனால், தருமபுரி மாவட்டத்தில், விண்ணப்பங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் போதிய விண்ணப்பங்கள் கிடைக்காமல் இளைஞர்கள் பரிதவிப்புக்குள்ளாகின்றனர்.
     மேலும், தருமபுரி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இருப்பு இல்லை என்ற அறிவிப்பு தொடர்ந்து ஒட்டப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பங்களைப் பெற வந்த இளைஞர்கள் தாங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன் கூறியது:
     தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வனத் துறை பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைப் பெற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் அஞ்சல் அலுவலகத்திற்கு வருகின்றனர். ஆனால், சொற்ப எண்ணிக்கையிலேயே இந்த விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. இதனால், ஏராளமானோர் வாரக்கணக்கில் வந்து விண்ணப்பங்கள் கிடைக்காமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர். விண்ணப்பங்கள் அனுப்ப இன்னும் இரு தினங்களே உள்ளதால் அரசு போதிய விண்ணப்பங்கள் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுத்து கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். அல்லது இணையதளம் வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
     தருமபுரி மாவட்டத்தில், இதுவரை 5,000 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தேவையை விடக் குறைவாக உள்ளது. இதனால், வருகிற விண்ணப்பங்கள் அனைத்தும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai