Enable Javscript for better performance
கைமேல் பலனைத் தந்த விவசாயிகளின் நவீன முயற்சி: குழாய் தண்ணீர் மூலம் நிரம்பிய கிருஷ்ணசெட்டி ஏரி!- Dinamani

சுடச்சுட

  

  கைமேல் பலனைத் தந்த விவசாயிகளின் நவீன முயற்சி: குழாய் தண்ணீர் மூலம் நிரம்பிய கிருஷ்ணசெட்டி ஏரி!

  By ஜங்ஷன் - intro  |   Published on : 07th August 2016 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாழ்வான பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரக் கிணற்றில் இருந்து மேடான பகுதியிலுள்ள ஏரிக்குக் குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல கடந்த ஆண்டு அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்ட நவீன முயற்சி, இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் நல்ல பலனைத் தந்துள்ளது.

  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி- துரிஞ்சிப்பட்டியில் உள்ள கிருஷ்ணசெட்டி ஏரி, சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நேரடிப் பாசனப் பரப்பு இல்லாவிட்டாலும் சுமார் 3 கிமீ சுற்று வட்டாரத்திலுள்ள 85 கிணறுகளுக்கு நிலத்தடி நீரை வழங்குகிறது இந்த ஏரி.

  போதிய மழை இல்லாததால் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியும் நிரம்பவில்லை, சுற்றுவட்டாரத்தில் உள்ள 400 ஏக்கரில் விவசாயமும் நடைபெறவில்லை.

  இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சி. தமிழ்வாணனின் முயற்சியில் 42 விவசாயிகள் சேர்ந்த "விடியல் நீரேற்றுப் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்வள பராமரிப்புச் சங்கம்' கடந்த 2014 ஏப்ரலில் தொடங்கப்பட்டது.

  ஏற்காடு மலைத் தொடரில் இருந்து உருவாகி வரும் வேப்பாடி ஆற்றங்கரையோரம் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர்த் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து 2.5 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணசெட்டி ஏரிக்குத் தண்ணீர் எடுத்துச் செல்ல நவீன திட்டம் உருவாக்கப்பட்டு அரசின் அனுமதியும் பெறப்பட்டது.

  இதற்காக துரிஞ்சிப்பட்டியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் ரூ.40 லட்சம் கடனும் பெறப்பட்டது. மேலும் நண்பர்கள் வட்டத்தில் இருந்து சுமார் ரூ. 50 லட்சம் வரை கடனுக்கும் ஏற்பாடு செய்தார் தமிழ்வாணன்.

  தண்ணீர் எடுக்கத் திட்டமிடப்பட்ட வேப்பாடி ஆற்றங்கரையோரக் கிணறு தாழ்வான பகுதி. ஏரி மேடான பகுதி. எனவே, கிணற்றுக்கு அருகே 50 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் வைத்து தண்ணீரை ஏற்ற முடிவு செய்து, சுமார் 1.7 கிமீ தொலைவு வரை (தண்ணீர் தானாகச் செல்லும் சமதளப் பரப்பு வரை) குழாயும் பதிக்கப்பட்டது.

  அதன்பிறகு கிருஷ்ணசெட்டி ஏரி வரை சாலையோரக் கால்வாய் அமைக்கப்பட்டது. பருவமழைக் காலத்தில் சுமார் 3 மாதங்கள் தண்ணீர் கிடைத்து, ஏரி நிரம்பினால், அடுத்த 6 மாதங்களுக்கு விவசாயிகளுக்குத் தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை.

  கடந்த ஆண்டு 2015 அக்டோபரில் முதல் முறையாக தண்ணீர் ஏற்றப்பட்டு ஏரி நிரம்பியது. ஆனால் நிகழாண்டில் ஜூலை கடைசி வாரத்திலேயே வேப்பாடி ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்க, தண்ணீர் ஏற்றும் பணிகள் தொடங்கின.

  ஓரிரு நாள்களில் கிருஷ்ணசெட்டி ஏரி நிரம்பியது. இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

  இந்த நவீனத் திட்டம் தொடர்பாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன் கூறியது:

  அண்மையில் கூட்டுறவு வங்கியிலுள்ள விவசாயக் கடன்களை முதல்வர் தள்ளுபடி செய்தபோது, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ரூ.27 லட்சமும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

  தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பின்னேற்பு மானியமாகப் பெறும் வகையில் ரூ.1.22 கோடிக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு மாநில அரசின் தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் ஒப்புதலோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

  ஏரி நிரம்பத் தொடங்கிவிட்டது. இனி கவலையில்லை. விவசாயிகள் மீண்டும் நம்பிக்கையோடு விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தொடங்கியிருக்கிறார்கள். அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தாங்கும் வகையிலான குழாயைத்தான் பதித்திருக்கிறோம்.

  தண்ணீர் கிடைத்ததற்குப் பிறகு கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை சிறிதாவது வளமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் தமிழ்வாணன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai