Enable Javscript for better performance
விவசாயிகள் மீது தாக்குதல் சம்பவம்: டி.ஐ.ஜி நேரில் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் மீது தாக்குதல் சம்பவம்: டி.ஐ.ஜி நேரில் விசாரணை

    By DIN  |   Published on : 01st November 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் அருகே விவசாயிகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி நாகராஜன் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
    அரூர் வட்டம், கொங்கவேம்பு ஊராட்சிக்கு உள்பட்ட ச.பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ராமு (65). விவசாயி. இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த சங்கர் மகன் தீர்த்தகிரிக்கும் இடையே கடந்த ஆண்டு பொங்கல் விழாவின்போது தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
    இதனால் இருதரப்பிலும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ச.பட்டியைச் சேர்ந்த சிலர் விவசாயிகள் ராமு, செல்வம் (50) ஆகியோரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்களது மாட்டுக்கொட்டகை, குடிசை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தாகவும் கூறப்படுகிறது.
    இந்தச் சம்பவம் குறித்து ராமு, செல்வம் ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ச.பட்டியைச் சேர்ந்த தீர்த்தகிரி, கிரிகரன், வெள்ளையப்பன் மற்றும் சிலர் மீது அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
    டி.ஐ.ஜி விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி நாகராஜன் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பண்டி கங்காதர் (தருமபுரி), மகேஷ்வரன் (கிருஷ்ணகிரி) ஆகியோர் உடனிருந்தனர்.
    இதுகுறித்து சேலம் சரக டி.ஐ.ஜி நாகராஜன் கூறியது: ச.பட்டியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்னை, இரு சமுதாயங்களுக்கு இடையிலான பிரச்னையாக மிகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொங்கவேம்பு ஊராட்சியில் எந்தப் பிரச்சனையும் இல்லை, நிலைமைக் கட்டுக்குள் உள்ளது. விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைப் பிடிக்க 4 டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரையில் அந்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள். அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai