Enable Javscript for better performance
விபத்து வழக்கில் இரு அரசுப் பேருந்துகள் ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், இரண்டு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
    தருமபுரியிலிருந்து பாலக்கோடு வழியாக பெங்களூருவுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி அரசுப் பேருந்து சென்றது.
    இந்தப் பேருந்து, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்றபோது, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தருமபுரி மாவட்டம், அதகப்பாடியைச் சேர்ந்த கட்டட மேற்பார்வையாளர் பழனி (47), நாகர்கூடலைச் சேர்ந்த மாது (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
    இவர்கள் இருவரும், விபத்துத் தொடர்பாக இழப்பீடு கோரி, தருமபுரி மாவட்ட சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
    இந்த வழக்கில், கடந்த 2012 நவம்பர் 30-இல், பழனிக்கு ரூ.1.75 லட்சம், மாதுவுக்கு ரூ.2 லட்சம் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க
    நீதிமன்றம் உத்தரவிட்டது.
    ஆனால், இழப்பீடு தொகை வழங்கப்படாததால், இருவரும் நிறைவேற்று மனுத் தாக்கல் செய்தனர்.
    இம் மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி வட்டியுடன் சேர்த்து பழனிக்கு ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 700, மாதுவுக்கு ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க வேண்டும், தவறினால் தலா ஒரு பேருந்து வீதம் ஜப்தி செய்யலாம் என உத்தரவிட்டது.
    இந்த உத்தரவுக்கும் பின்னரும், போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால், நீதிமன்றப் பணியாளர்கள், தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து பொம்மிடி, அரூர் பகுதிகளுக்கு  செல்ல இருந்த 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai