சுடச்சுட

  

  இடைத்தேர்தலுக்குப் பிறகு பேரவையில் தி.மு.க.வின் பலம் உயரும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

  By தருமபுரி,  |   Published on : 03rd November 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இடைத்தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவையில் தி.மு.க.வின் பலம் 92 ஆக உயரும் என அக் கட்சியின் பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
   தருமபுரியில் திமுக மாவட்டச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்பிரமணியின் மகன் திருமணத்தை புதன்கிழமை நடத்திவைத்து அவர் மேலும் பேசியது:
   தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சி காணொலிக் காட்சி ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. தொழில் துறை வளர்ச்சியில் திமுக ஆட்சியில் இருந்தபோது, முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்தது, மறுக்கவில்லை. ஆனால், இப்போது 18ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
   பேரவையில் தினமும் 110 விதியின்கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அப்போதே இதற்கான நிதி ஒதுக்கீடு எங்கே எனப் பேரவையில் கேள்வி எழுப்பினோம். பதிலும் சொல்லவில்லை, எங்களை முழுமையாகப் பேசவும் விடவில்லை.
   காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது, அவசரப் பேரவைக் கூட்டமும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இரண்டும் இல்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம்.
   அந்தக் கூட்டத்துக்கு பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடின்றி எல்லோரையும் அழைத்தோம். தேர்தலில் வைப்பு நிதியைக் கூட பெற முடியாதவர்கள், போட்டியிலிருந்து திடீரென விலகியவர்கள் என அனைவரையும்தான் அழைத்தோம். ஒருசிலர் வரவில்லை.
   மாநிலத்தில் 89 எம்எல்ஏக்களைக் கொண்ட கட்சி மட்டுமல்ல, அப்போது அதிமுக பெற்ற மொத்த வாக்குகள்- 1.75 கோடி, திமுக பெற்ற மொத்த வாக்குகள்- 1.72 கோடி. 3 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம்.
   தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவையில் திமுகவின் எண்ணிக்கை 92 ஆக உயரும் என்றார் ஸ்டாலின்.
   விழாவில், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, முன்னாள் எம்.பி. டி.எம். செல்வகணபதி, பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் பிஎன்பி. இன்பசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai