சுடச்சுட

  

  காவிரி விவகாரத்தில் மக்களவை கூட்டத் தொடரை முடக்குவோம்: அன்புமணி ராமதாஸ்

  By தருமபுரி,  |   Published on : 03rd November 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு மக்களவை கூட்டத் தொடரை முடக்குவோம் என பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
   தருமபுரி ரயில் நிலையம் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை, தடுப்பு வேலிகளால் கடந்த சில நாள்களுக்கு முன் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   இதுதொடர்பாக, தருமபுரி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை நேரில் வந்து அடைக்கப்பட்ட சாலைகளைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
   இதனைத் தொடர்ந்து அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.
   இந்த விவகாரத்தில் அண்மையில் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அக் கூட்டம் அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல. திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற கூட்டமாகும்.
   கடந்த மக்களவை கூட்டத் தொடரின்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கூறி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்கள் அக் கூட்டத் தொடர் முழுவதையும் முடக்கினர்.
   அதுபோல, காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, வருகிற நவ.14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு கூட்டத் தொடர்களை அனைத்துக் கட்சியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒன்றுபட்டு முடக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே அதிமுக குழுத் தலைவர் தம்பிதுரையியிடம் பேசியுள்ளேன். அதேபோல, திமுக மாநிலங்களவை உறுப்பினர்களிடமும் பேசுவேன். நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றவும், தமிழகத்தின் உரிமையைக் காக்கவும் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஒன்றுபட வேண்டும்.
   தருமபுரி முதல் ஒசூர் வரையிலான இருப்புப் பாதையை பெங்களூரு கோட்டத்திலிருந்து பிரித்து, சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்.
   தருமபுரி ரயில் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சுமார்
   ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை அடைக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது. இந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்கப் போவதில்லை. பொதுமக்கள் தேவையைக் கருதி இச் சாலைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும், வருங் காலங்களில் நிரந்தரமாக ரயில்வே இடத்தின் கடை, குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, தருமபுரிக்கு வருகிற ரயில்கள் 2-ஆவது நடைமேடையில் நிற்கின்றன. இதனால் மூத்த குடிக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அதனை மாற்றி முதலாவது நடைமேடையில் ரயில்கள் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவேன்.
   தருமபுரி மாவட்டத்தில், நீராதாரங்களை மேம்படுத்திட பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 74 ஏரிகள் உள்பட அனைத்து ஏரிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் சாந்தமூர்த்தி, முன்னாள் எம்.பி. பாரிமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   மக்கள் குறைகேட்கிறார்
   அன்புமணி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட ஒடசல்பட்டியில் வியாழக்கிழமை காலை
   10 மணியளவில் அன்புமணி மக்கள் குறைக் கேட்கிறார். அதைத் தொடர்ந்து வேடியூர், போசிநாய்க்கனஹள்ளி, லிங்கநாய்க்கன்ஹள்ளி, வீரக்கவுண்டனூர், வெங்கடதாரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, நொச்சிக்குட்டை, கந்தகவுண்டனூர், ஆத்தூர், வேப்பிலைப்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, காவேரிபுரம், தா.அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களின் குறைகளைக் கேட்கிறார் என பாமக கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.இமயவர்மன் புதன்கிழமை தெரிவித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai