சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளைத் தூர்வார வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

  By அரூர்,  |   Published on : 04th November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
   பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒடசல்பட்டி, வேடியூர், லிங்கநாய்க்கனஹள்ளி, வீரகவுண்டனூர், வெங்கடதாரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, நொச்சிக்குட்டை, கந்தகவுண்டனூர், ஆத்தூர், வேப்பிலைப்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, காவேரிபுரம், தா.அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
   இம் முகாமில் அன்புமணி ராமதாஸ் பேசியது: பாப்பிரெட்டிப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து குடிநீர் செல்லாத கிராமங்களைக் கணக்கெடுத்து, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
   தருமபுரி மாவட்டம் வறட்சி பாதித்த மாவட்டமாக தற்போது உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர் அடைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் நீர்நிலைகளில் போதிய அளவில் தண்ணீர் தேங்காமல், ஆறுகள் வழியாக வீணாக கடலுக்குச் சென்று விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்வாய் மற்றும் ஏரிகளைத் தூர்வார முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏரிகள், நீர்நிலைகளைத் தூர் வாருதல் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.
   தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்குவதற்கும், தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சியே மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இதேபோல், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளனர். பா.ம.க. முயற்சியால் இந்த இளைஞர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
   தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஆரம்ப வகுப்பு முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக கல்வி அளிக்கப்படும். விவசாயிகளுக்கு விதை உள்ளிட்ட விவசாய இடுபொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   இதில், உழவர் பேரியக்கத்தின் மாநில செயலர் இல.வேலுசாமி, மாநில துணைப் பொதுச் செயலர் சாந்தமூர்த்தி, மாநில துணைத் தலைவர் ரா.அரசாங்கம், கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன், இளைஞர் அணித் தலைவர் அ.சத்தியமூர்த்தி, நகரச் செயலர் கே.அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai