சுடச்சுட

  

  இலவசத் திட்டங்களை நிறுத்திவிட்டு நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 06th November 2016 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசு இலவசத் திட்டங்களை நிறுத்திவிட்டு நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று தருமபுரி மக்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜகநாதன்கோம்பையில் பராமரிப்பின்றி உள்ள நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியது:
  ஜகநாதன்கோம்பை நீர்த்தேக்கம் என்ற மாரியம்மன் கோயில் பள்ளம் 2005ஆம் ஆண்டில் பெருவெள்ளத்தால் உடைந்து, அதன்பின் எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் பயனற்று உள்ளது. இது 1963ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
  தற்போதுள்ள சூழலில் சுமார் 6 ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 கிராமங்கள் இந்த அணை மூலம் பயன்பெறும். மீண்டும் சீரமைத்தால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்.
  தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 நீர்ப் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மொத்தம் 200 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இது அரசுக்கு ஒரு பெரிய தொகை அல்ல. மக்களுக்குப் பயன்படாத இலவசத் திட்டங்களுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ. 62 ஆயிரம் கோடியைச் செலவிட்டுள்ளது.
  இந்தப் பெரும் தொகையை நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினால், உணவு உற்பத்தி பெருகும். வேலையில்லாததால் வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்வது குறையும்.
  விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி மத்திய, மாநில அரசுகளுக்குக் கவலை இல்லை. தற்போது பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சியில் சிக்கியுள்ள தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
  இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டும் பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிவிட்டு, திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் மறுத்தது வேடிக்கையாக உள்ளது என்றார் அன்புமணி.
  தொடர்ந்து பாளையம்புதூரில் பொதுமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலும் அன்புமணி கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளில் பாமக மேற்கு மாவட்ட செயலர் சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai