சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை: விவசாயிகள் சங்கச் செயலர் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 06th November 2016 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார் அகில இந்திய விவசாயிகள் சங்கச் செயலர் விஜூ கிருஷ்ணன்.

  "விவசாயத்தைக் காப்போம், விவசாயிகளைக் காப்போம்' என்ற தலைப்பில் இந்தச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய பிரசாரப் பயணத்தில், தருமபுரியில் சனிக்கிழமை அவர் பேசியது:
  தேர்தலின் போது விவசாயிகள் தற்கொலையைத் தடுத்து நிறுத்துவதாகவும், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு 50 சதம் அதிக விலை வழங்குவதாகவும் மோடி வாக்குறுதி அளித்தார். வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது.
  விவசாய நிலத்தை அரசு பயன்பாட்டிற்கோ அல்லது தொழிற்சாலைக்கோ எடுத்தால் சந்தை மதிப்பைவிட 6 மடங்கு கூடுதலாகத் தருவதாகக் கூறினார். இப்போது, விவசாயிகளின் கையெழுத்து இல்லாமலேயே நிலத்தை எடுக்க முடியும் என்கிறார்.
  விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 24ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார் விஜூ கிருஷ்ணன்.
  வரவேற்புக் கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.என். மல்லையன் தலைமை வகித்தார். அகில இந்தியத் துணைத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலர் பி. சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் கே. முகமது அலி, மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஏ. குமார் உள்ளிட்டோர் பேசினர்.
  இதேபோல, பென்னாகரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலம் நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம். ஆறுமுகம் தலைமை வகித்தார்.
  பாப்பாரப்பட்டியில் மாவட்டத் துணைச் செயலர் ஆர். சின்னசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பாலக்கோடு, இண்டூர் பகுதிகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai