Enable Javscript for better performance
ஒகேனக்கல், பென்னாகரத்தில் யானைகள் நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல், பென்னாகரத்தில் யானைகள் நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை

    By தருமபுரி,  |   Published on : 08th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே உறங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
     இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி வனக் கோட்டத்தில், ஒகேனக்கல், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சரகத்தில் 100 முதல் 150 யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
     தற்போது, வறட்சி நிலவுவதால் வனப் பகுதியில் போதிய உணவு, குடிநீர்க் கிடைக்காமல், அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கு அவ்வப்போது உணவுத் தேடி யானைகள் வெளியே வருகின்றன.
     கடந்த சில தினங்களாக ஒகேனக்கல், பென்னாகரம் சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.
     எனவே, இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் தங்களது வாகனங்களைச் சாலையோரம் நிறுத்த வேண்டாம்.
     யானைகள் கிராமங்களுக்குள் புகுவதைத் தடுக்க ஏற்கெனவே, மாவட்டத்தில் 170 கி.மீ. நீளத்துக்கு யானைத் தடுப்பு அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
     அதேபோல, வறட்சியைக் கருத்தில் கொண்டு சூரிய மின்சக்தியில் இயங்கும் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து வன விலங்குகளுக்கு தண்ணீர் அளிக்கப்படுகிறது.
     மேலும், வனப் பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஆங்காங்கே, வன விலங்குகள் நடமாடும் பகுதி என விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
     யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 13 பகுதிகளில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
     இக்குழுக்கள் மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.
     எனவே, இந்தப் பகுதிகளில் இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே உறங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
     அதேபோல, வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் இரவில் வெளியே வருவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
     யானைகளை விரட்ட தனியாக முயற்சிக்க வேண்டாம். வனத்துறைக்கு தகவல் அளித்து, அவர்களோடு இணைந்து வனப்பகுதிக்குள் விரட்டலாம்.
     மின்வேலி அமைக்கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம். விவசாய நிலங்களில் கட்டப்படும் குடில்கள் உறுதியான முறையில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai