சுடச்சுட

  

  அறம் சார்ந்த ரசனையை இழந்துவிட்டோம்: பர்வீன் சுல்தானா

  By தருமபுரி,  |   Published on : 10th November 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அறம் சார்ந்த ரசனையை இழந்துவிட்டோம் என வேதனை தெரிவித்தார் பேச்சாளரும், தமிழ்ப் பேராசிரியருமான மு.சா. பர்வீன் சுல்தானா.
   தருமபுரித் தமிழ்ச் சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஐப்பசித் திங்கள் சிறப்பு நிகழ்ச்சியில், "தமிழ்மொழி அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
   "உலகின் எல்லா மொழிகளிலும் அவற்றின் சொல் மற்றும் எழுத்துக்கு இலக்கணம் உண்டு. ஆனால், தமிழில் மட்டும்தான், வாழ்வியலுக்கும் இலக்கணம் உண்டு.
   அணுவைப் பிளந்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய "நானோ' தொழில்நுட்பம் அல்லவா? அது தமிழுக்குப் பெருமையல்லவா?
   கவலைதான் உலகின் அற்பமான ஒன்று என்று அப்போதே விளக்கிய சமூகம் தமிழ்ச் சமூகம். ஆசாரக்கோவையைப் படித்து அதன்படி நடந்தால் நமக்கு புற்றுநோய் வருமா? நீரிழிவுநோய் வருமா? சர்க்கரை நோய்தான் வருமா?
   தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் இலக்கணமாக விளங்கும் சிலப்பதிகாரத்துக்கு விழா எடுக்க நம்மில் ஆளில்லை என்பது பெரும் துயரம். அதனால், ஏதோவொரு வகையில் குற்றவாளியாகவே நாம் இருக்கிறோம்.
   அறம் சார்ந்த ரசனையை இழந்துவிட்டோம். குடும்ப உறவுகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகளில், திரைகளில் கண்டு கைத்தட்டிச் சிரிக்கிறோம். நம் வீடுகளில் நடந்தால் அப்படித்தான் சிரிப்போமா?
   நம்மிடமுள்ள, நாம் நம்பும் நல்லவற்றைப் புகழ்ந்துச் சொல்லும் போக்கை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்படி இல்லாமல், எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.
   வார்த்தைகளை எளிமையாக்கி முதல் உரைநடையை உருவாக்கித் தந்தவர் அருட்பிரகாச வள்ளலார். அவருக்குப் பிறகு பாரதியார் அப்பணியைச் செம்மையாகச் செய்தார்.
   பாரதியைத் தொடர்ந்து பாரதிதாசனும், அவரைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் தமிழ் இலக்கியப் போக்கை மக்களுக்கானதாக மாற்றியவர்கள். இவர்களையெல்லாம் எதிர்காலச் சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை' என்றார் பர்வீன் சுல்தானா.
   நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கத் தலைவர் ந. ராசேந்திரன், செயலர் கு.அ. மாணிக்கம், பொருளாளர் பொ. சச்சிதானந்தம் உள்ளிட்டோரும் பேசினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai