சுடச்சுட

  

  தொப்பூர் சுங்கச் சாவடியில் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்

  By தருமபுரி,  |   Published on : 10th November 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி அருகே தொப்பூர் சுங்கச் சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
   பெங்களூருவிலிருந்து சேலம் செல்ல வழியில் தருமபுரி அடுத்த குறிஞ்சி நகரில் சுங்கச் சாவடி உள்ளது. இந்தச் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் செல்லாது என அறிவித்தது.
   இதனால், தொலைதூரத்தில் இருந்த லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே சுங்கக் கட்டணம் கட்ட முடியாமல் திணறினர். சிறிது நேரம் கழித்து ரூ.500 மற்றும் ஆயிரத்தை நோட்டுகளை சுங்கச்சாவடி ஊழியர்கள் வாங்கத் தொடங்கினர். இருப்பினும், வாகன ஓட்டுநர்களுக்கு உரிய சில்லரையை அளிக்க தாமதமானது.
   இதில், புதன்கிழமை காலை மேலும், வாகனங்களின் வருகை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடக்க சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது. இந்த நெரிசல் மாலை வரை இருந்தது. இதையடுத்து, வருகிற 11-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
   அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நள்ளிரவு முதல் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.500-க்கும் மட்டுமே பெட்ரோல் அளிக்கப்பட்டது. ரூ.500-க்கு குறைவாக பெட்ரோல் கேட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது. மேலும், சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் நகரிலுள்ள ஏடிஎம் மையங்கள் முன் திரண்டனர். மேலும், உணவகங்கள், வணிக வளாகங்களில் ரூ.500 வாங்க மறுத்ததால் பொதுமக்கள் செய்வது அறியாது திகைத்தனர். இதனால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தருமபுரி நகரில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai