சுடச்சுட

  

  ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கியில் மக்கள் கூட்டம்

  By தருமபுரி,  |   Published on : 11th November 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்ற வியாழக்கிழமை தருமபுரி மாவட்டத்திலுள்ள,வங்கிகளில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
   மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும்,அவற்றை வங்கிகளில் அளித்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தது.
   மேலும்,இரண்டு நாள்கள் ஏடிஎம் மையங்கள் நவ.9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
   இதனால்,வாடிக்கையாளர்கள்,மாத ஊதியம் பெறும் ஊழியர்கள்,தொழிலாளர்கள்,ஓய்வூதியதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பணத்தை வங்கியிலிருந்தும்,ஏடிஎம் மையங்களிலிருந்து எடுக்க முடியாமல் பரிதவித்தனர்.
   அதேபோல,தங்களது அன்றாட செலவினங்களுக்கு ஏற்கெனவே பணத்தை ரூ.500 மற்றும் ரூ.1000-ஆக வைத்திருந்தவர்களும் சில்லரையின்றி அத்தியாவசியப் பொருள்கள்கூட வாங்க இயலாமல் பாதிப்புக்குள்ளாயினர்.
   இந்த நிலையில்,வங்கிகளில் ரூ.4 ஆயிரத்தை அடையாள அட்டை காண்பித்து அதற்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்ததால்,வியாழக்கிழமை காலை வங்கிகள் திறப்பதற்கு முன்பே,வாடிக்கையாளர்களும்,பொதுமக்களும் தங்களிடமிருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றவும்,காசோலை மூலம் பணம் பெறவும் குவியத் தொடங்கினர்.
   தருமபுரி நகரம்,இலக்கியம்பட்டி,நல்லம்பள்ளி,பாலக்கோடு,பென்னாகரம்,காரிமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும்,பாரத் ஸ்டேட் வங்கி கிளைகள் மற்றும் இந்தியன் வங்கி,கனரா வங்கி,கார்ப்பரேஷன் வங்கி,ஆக்ஸிஸ் வங்கி என தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன.இதே போல,கூட்டுறவு வங்கிகள்,அஞ்சல் அலுவகங்கள் என அனைத்து இடங்களிலும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து,வங்கி திறந்த முதல்நாள் என்பதால்,கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
   வங்கிகளில் ரூ.4,000 வரை மாற்ற வந்தவர்களுக்கு ஒரு படிவம் அளிக்கப்பட்டு,அதனை நிரப்பிய பின்பு அதற்கு மாற்றாக பணம் தரப்பட்டது.
   அதேபோல,காசோலை மூலம் தங்களது வங்கிக் கணக்கில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்பட்டது.மக்கள் கூட்டம்,மாலையில் படிப்படியாக குறையத் தொடங்கியது.
   தருமபுரியில் பெரும்பாலான வங்கிகளில் பொதுமக்களுக்கு ரூ.100 நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன.தாய்கோ உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே தங்களது பணத்தை மாற்ற மற்றும் எடுக்க வந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
   வங்கிகளில் திடீரென பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால்.போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai