சுடச்சுட

    

    "அறிவியல் வளர்ச்சி அறம் சார்ந்ததாக இருத்தல் அவசியம்'

    By தருமபுரி,  |   Published on : 12th November 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறிவியல் வளர்ச்சி என்பது அறம் சார்ந்ததாக இருத்தல் அவசியம் என்றார் மருத்துவர் கு. சிவராமன்.
     தருமபுரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புச் சந்திப்பில், "நலம் வாழ...' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
     "எந்த நோயும் இல்லாதவர்கள் அதிர்ஷ்டவசமாக நோயின்றி வாழ்கிறோமே தவிர, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என நம்பிவிட வேண்டாம். அந்தளவுக்கு சூழல் மோசமாகி இருக்கிறது.
     ஒரு காலத்தில் திருமணம் செய்யாதவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய் தற்போது 30 முதல் 40 வயதுக்குள்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் வரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
     இதற்கான முதல் காரணம், உணவு தானிய உற்பத்தியில், உணவு தயாரிப்பில், பரிமாறுதலில் நடந்த மாற்றம், நம்முடைய பண்பாட்டில் நடந்த மாற்றம்தான்.
     இரண்டாவது முக்கியமானது மனம். எதைக் கண்டு மகிழ்வது, எதற்காக வருந்துவது, எதற்காக கோபப்படுவது என்பதையெல்லாம் நாம் முடிவு செய்வதில்லை. ஊடகங்கள் முற்றிலும் நம் மனத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. மூன்றாவதாக சுற்றுச்சூழல், நாம் யோசிக்க முடியாத அளவுக்கு மாசடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைக்குப் புரிய வைக்காவிட்டால் பெரும் சிக்கல் நேரிடும்.
     ஒரு மருத்துவரால், ஒரு சூழலியல்வாதியால் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியாது. பல்வேறு தளங்களில் பணியாற்றும் அனைவரும் இணைந்துதான் சமூக மாற்றத்தை விதைக்க வேண்டும்.
     தினம் தினம் நாம் உண்ணும் காய்கறிகளில் 18 வகையான பூச்சிகொல்லிகள் நுண்ணிய அளவில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றின் பின்னால் பெரும் வணிகம் இருக்கிறது.
     48 மணி நேரத்தில் கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருள்களை 180 நாட்கள் கெடாமல் வைத்திருக்க ஏராளமான ரசாயனங்களைக் கொட்டி விற்பனை செய்கிறார்கள்.
     உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும், சில வகையான தடுப்பூசிகளில் சேர்ந்துள்ள நுண்ணிய அளவு பாதரசமும்தான் "ஆட்டிசம்' குறைபாட்டோடு குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
     குளிர்பானங்களுக்கு மாற்றாக விற்பனைக்கு புட்டிகளில் வந்திருக்கும் பழச்சாறுகளும் அச்சமூட்டுபவை.
     கம்பு, கேழ்வரகு, திணையில் உள்ள நிறமிகள் மட்டுமே ஏராளமான சத்துகளை நமது உடலுக்குத் தருகின்றன. வேறெதிலும் இல்லாத இரும்புச் சத்து கம்பில் இருக்கிறது, வேறெதிலும் இல்லாத கால்சியம் கேழ்வரகில் இருக்கிறது.
     உடல் சதை போடும் எனச் சொல்லி வாழைப்பழத்தையும், கொழுப்பு சேரும் எனச் சொல்லி தேங்காயையும் நம்மிடமிருந்து பிரித்தார்கள். மரபணு மாற்றம் செய்யப்படும் கடுகுச் செடி, பக்கத்திலுள்ள நாட்டு கடுகுச் செடியையும் மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது.
     உடலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகூட்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்துபவை.
     எனவே, அறிவியல் வளர்ச்சி என்பது சூழலைச் சிதைக்காத, அறம் சார்ந்த அறிவியலாக இருக்க வேண்டும். கூடவே அறம் சார்ந்த மருத்துவமும் அவசியம் என்றார் சிவராமன்.
     மாவட்டக் கல்வி அலுவலர் சி. ராஜசேகரன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி. முனுசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai