சுடச்சுட

  

  தருமபுரி நகரிலுள்ள அனைத்து வங்கிகளிலும் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களிடமிருந்த பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தினர்.
  ஆயிரம்,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். அதன்பிறகு புதன்கிழமை முழு நாள் வங்கிகளில் எந்தவித பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை.
  வியாழக்கிழமை செல்லாத நோட்டுகளை வாங்கிக் கொண்டு, ரூ. 100 நோட்டுகளை வழங்கும் பணி மட்டும் நடைபெற்றது. அதன்பிறகு, வெள்ளிக்கிழமை காலை ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பி வைக்கப்பட்டது. ஒருவர் ரூ. 2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என வரையறை செய்யப்பட்டிருந்த போதும், ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே ஏ.டி.எம். மையங்கள் திறந்து வைக்க முடிந்தது. பணம் தீர்ந்த காரணத்தால் வெகுவிரைவில் ஏடிஎம் இயந்திரங்கள் செயலிழந்தன.
  இந்த நிலையில், 3-ஆம் நாளாக சனிக்கிழமை காலை தருமபுரியிலுள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் ஏராளமான பொதுமக்கள் காலை 9.30 மணிக்கு குவியத் தொடங்கினர். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கி கிளைகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
  ஒவ்வொருவரும் தங்களது வங்கி கணக்கில் மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
  ஏ.டி.எம். மையங்கள் மூடல்: வெள்ளிக்கிழமை இரவு பணம் நிரப்பப்பட்ட ஏ.டி.எம். மையங்கள் சனிக்கிழமை முற்றிலும் மூடப்பட்டன.
  காலையில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்கள் பிற்பகல் வரை பணம் நிரப்ப வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். ஏ.டி.எம். இயந்திரங்களில் ரூ. 100 நோட்டுகளும், குறைந்த அளவில் ரூ. 2,000 புதிய நோட்டுகளும் வைக்கப்பட்டதால், இந்த சிக்கல் ஏற்பட்டதாக வங்கியாளர்கள் தெரிவித்தனர். புதிதாக அச்சிடப்பட்டுள்ள ரூ. 500 தாள்கள் ஓரிரு நாள்களில் வந்துவிட்டால் சிரமம் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
  வரிசையில் நின்ற பலரும் தங்களிடமிருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த வந்திருந்தவர்களே. அடையாள அட்டை நகலுடன் படிவம் பூர்த்தி செய்து கொடுத்து பணத்தைச் செலுத்தினர். வங்கிப் பணியாளர்களுடன் காவல் துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai