Enable Javscript for better performance
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

  

  அரூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பறையப்பட்டி புதூரைச் சேர்ந்த விவசாயி சின்னப்பன் மகன் தேவேந்திரன் (52). இவர், தமது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இம்மாதம் 10-ம் தேதி குடும்பத்தினருடன் திருவண்ணாமலை சென்றார்.
  சனிக்கிழமை வீடு திரும்பினார். இதனிடையே, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம், 4 ஏ.டி.எம். அட்டைகள், டி.வி, டி.வி.டி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
  இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  விஷம் அருந்திஇளைஞர் தற்கொலை
  கடத்தூர் அருகே விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வேடியூரைச் சேர்ந்த மாது மகன் ராஜ்குமார் (19). இவர், போட்டித் தேர்வுகள் எழுதுவதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டாராம். ஆனால், பெற்றோரால் பணம் தர முடியவில்லையாம்.
  இதனால் மனமுடைந்த ராஜ்குமார் விஷம் அருந்தினார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
  இதுகுறித்து கடத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  இரு வீடுகளில் திருட்டு
   போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  போச்சம்பள்ளி அருகே உள்ள திருவயலூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் சக்திவேல்(50). விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது சனிக்கிழமை அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.41 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
  இதேபோல, ராசிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சின்னராஜ் (47). இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சனிக்கிழமை வெளியே சென்றிருந்தாராம். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  ரூபாய் நோட்டுகள் செல்லாத விவகாரம்:
  மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
  ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  இந்தியாவில் புழக்கத்தில் இருந்து ரூ.500, ரூ.1,000 தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், விவசாயிகள் உரம், பூச்சி மருந்து வாங்கவும், பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை உள்ளது.
  விவசாயப் பொருள்களான காய்கறிகள், கீரைகள், பழங்கள், உணவு பொருள்களின் விலைகள் 90 சதம் குறைந்துள்ளன. எந்த வங்கியிலும், ஏ.டி.எம். மையங்களிலும் விவசாயிகள் பணம் எடுக்க முடியவில்லை.
  மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நவ.16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  கிருஷ்ணகிரியில் வங்கி பணப் பரிமாற்ற படிவம் ரூ.15-க்கு விற்பனை
  கிருஷ்ணகிரி,நவ.12: கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வங்கி பணப் பரிமாற்றத்துக்கான படிவம் ரூ.15-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
  பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அளிக்கப்படும் படிவம் வங்கியில் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, சிலர் அந்த படிவங்களை நகல் எடுத்து ரூ.15-க்கு விற்று வருகின்றனர்.
  விவரம் அறியாத பொதுமக்கள் ரூ.15 அளித்து படிவத்தை பெற்று செல்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai