சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பணப்புழக்கத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் நகைக்கடை மற்றும் ஜவுளித் தொழில் உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
  பணத்தாள் மீதான தடை அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை வாங்குவதில்லை என வணிகர்கள் அறிவித்துவிட்டனர்.
  என்றாலும் ஓரிரு கடைகளில் மட்டும் முதல் நாள் அந்தப் பணம் பெறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பணத்தாள் தடை செய்யப்பட்ட 5-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை தருமபுரி நகரிலுள்ள அனைத்துக் கடைகளும் பெயருக்குத் திறக்கப்பட்டு, மாலையில் சீக்கிரமாகவே பூட்டப்பட்டன.
  இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியது:
  வங்கியின் கடன் அட்டை, ஏடிஎம் அட்டை வைத்துள்ளவர்களிடம் மட்டும் வியாபாரம் செய்தோம். வேறு வழியில்லை. மாலையுடன் கடையைப் பூட்டிவிட்டு வந்துவிட்டோம். பெரும்பாலான கடைகளில் இதே நிலைதான் தொடருகிறது. முழுமையாக கணக்குகளை சரியாகப் பராமரிப்போர் ஒரு நிலைப்பாட்டையும், கணக்கை சரிவர பராமரிக்காதோர் ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதால், எங்கள் தொழில் சார்ந்த சங்கங்களும் எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை.
  எனவே, அப்படியே சங்கங்கள் அமைதி காக்கின்றன. அரசு தெளிவான நிலை எடுத்தால்தான் தொழில் செய்ய முடியும். மக்களும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்றார் அவர்.
  சில்லறை விற்பனையும் பாதிப்பு: மொத்த வியாபாரிகளிடம் சென்று அன்றாடம் பொருள்களை வாங்கி வந்து கடையில் வைத்து விற்பனை செய்வோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மொத்த விற்பனையாளர்களும் ரூ. 1,000, ரூ. 500 நோட்டுகளை வாங்காததால், கொள்முதல் செய்வதை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
  தருமபுரி நகரில் பெரும்பகுதி கடைகள் செவ்வாய்க்கிழமைதான் விடுமுறை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை சில்லறை விற்பனைக் கடைகள் ஆங்காங்கே மூடப்பட்டிருந்தன. சிகரெட் உள்ளிட்ட ஓரிரு பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.
  அதற்கான காரணம் தெரியவில்லை. மொத்தக் கொள்முதல் நடைபெறாமல் போனதால், இங்குள்ள மொத்த வியாபாரிகள் தங்களிடமுள்ள பொருள்களின் விலையை உயர்த்தியிருப்பதாகவும் சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai