சுடச்சுட

  

  தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை இயல்புநிலைக்குத் திருப்ப கோரிக்கை

  By DIN  |   Published on : 14th November 2016 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தின் மாநில கெளரவப் பொதுச் செயலர் குப்புசாமி, மாநிலத் தலைவர் மேசப்பன், பொதுச் செயலர் முத்துப்பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
  ரூ. 1000, ரூ. 500 நோட்டுகளை செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தைத் தொடர்ந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வரவு செலவு செய்வது வாய்மொழியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள 4,654 சங்கங்களின் உறுப்பினர்களும் வாடிக்கையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் தவணை செலுத்த வந்தவர்களிடம் தொகையைப் பெற முடியவில்லை. சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வருவோருக்கும் பணம் வழங்க முடியவில்லை. நிரந்தர வைப்புகளுக்கு வட்டி வழங்க முடியவில்லை.
  அடகு வைத்துள்ள நகைகளை மீட்டெடுக்க வருவோருக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு நகையைத் திரும்பத் தர முடியவில்லை. விவசாயத்துக்கு உரம் வழங்க முடியவில்லை. இவற்றால் கிராமப்புற மக்களின் நம்பகத் தன்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடர்பாடுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் அனைத்துப் பணியாளர்களும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு திங்கள்கிழமை சென்று நிதி உதவி கோரத் திட்டமிட்டுள்ளோம். நிதி வரும் வரை சங்கங்கள் செயல்படாது என்பதையும் முறையாக அறிவிக்கவும் கோருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai