சுடச்சுட

  

  நான்காம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தருமபுரி மாவட்டத்திலுள்ள வங்கிகளில் பெருங்கூட்டம் காணப்பட்டது. அன்றாடம் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அரிதாக பணம் நிரப்பப்பட்ட ஓரிரு ஏடிஎம் மையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றனர்.
  கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் நோக்கில் ரூ. 1,000, ரூ. 500 நோட்டுகளை மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் செல்லாததாக அறிவித்தது.
  இதனால், புதன்கிழமை வங்கிகளில் எவ்வித பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. வியாழக்கிழமை முதல் தங்களிடமுள்ள ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை வங்கியில் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர்.
  தருமபுரி மாவட்டத்தில் நான்காம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் காணப்பட்டது. பணத்தாள் மாற்றும் நடவடிக்கையில் புதிதாக அச்சிடப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன. ஆனால், அவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. அந்தப் பணத்துக்குச் சில்லறை வாங்க தடுமாற வேண்டும் என்பதால் பலரும் தற்போதுள்ள பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதை மட்டுமே செய்தனர்.
  தலைமை அஞ்சலகத்தில் பணத்தாள் மாற்றவும், சேமிப்புக் கணக்கில் பணத்தை போட்டு வைக்கவும் சாலை வரை நீண்ட வரிசை இருந்தது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
  ஏடிஎம் மையங்கள் மூடல்:
  வெறும் ரூ. 100 நோட்டுகளை மட்டுமே வைத்து விநியோகிக்க முடியும் என்பதால், தருமபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன. ஆங்காங்கே ஓரிரு மையங்களில் பணத்தை நிரப்பும் தகவல் கிடைத்த பொதுமக்கள், அங்கே கூடினர்.
    அதிகபட்சமாக ஒரு முறை ரூ. 2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்றாலும், மக்களின் தேவைக்கேற்ப பணத்தை இயந்திரத்தில் நிரப்ப இயலவில்லை. சேலம் பிரதான சாலையில் மருத்துவமனைக்கு எதிரே உள்ள பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையம் மாலை வரை மூடப்பட்டே இருந்தது.
  அதே சாலையிலுள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் முற்பகலில் மட்டும் பணம் இருந்ததால் நீண்ட வரிசை காணப்பட்டது.
    செங்கொடிபுரத்திலுள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம் மையத்தில் மாலையில் பணம் நிரப்பப்பட்டது. இதனால், இரவு வரை அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai