சுடச்சுட

  

  மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  By தருமபுரி,  |   Published on : 17th November 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூ. 500, ரூ.1,000 செல்லாது என அறிவித்த பிரதமர் மோடியின் அறிவிப்பைக் கண்டித்து தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் ஏ. குமார் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் பி. இளம்பரிதி, சி. நாகராஜன், கே.என். மல்லையன், இரா. சிசுபாலன், கிரைசாமேரி, நகரச் செயலர் ஜி. லெனின் உள்ளிட்டோர் பேசினர். தடையின்றி பணத்தாள் புழக்கத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
   கிருஷ்ணகிரியில்....
   கிருஷ்ணகிரியில் பழையபேட்டை ஆட்டோ நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
   மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், ஜெயராமன், சேதுமாதவன், சாம்ராஜ், நஞ்சுண்டன், வாசுதேவன், கோவிந்தசாமி, ஆஞ்சலாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   தமிழக விவசாயிகள் சங்கம்...
   கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார்.
   மாவட்ட நிர்வாகிகள் பெருமா, சரவணன், ஜெயபால், வேடியப்பன், கிருஷ்ணப்பா, சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திரமோடி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அரசின் நடவடிக்கையால் சாதாரண அடிதட்டு மக்கள், வங்கி கணக்கு இல்லாதவர்கள், முதியோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். விவசாயிகள் உரம், பூச்சி மருந்து வாங்க இயலாத நிலை உள்ளது. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை. காய்கறிகள், கீரைகள், பழங்கள், மலர்கள், உணவுப் பொருள்களின் விலை 90 சதம் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
   அரூரில்...
   இந்தியன் வங்கி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார்.
   சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள சுமார் ரூ. 70 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும். வங்கிகளில் செல்லாத பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai