சுடச்சுட

  

  தருமபுரியில் 50 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  By தருமபுரி,  |   Published on : 19th November 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில் நகராட்சிக்கு சொந்தமான பாதைப் புறம்போக்கில் சுமார் 50 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
   தருமபுரி நகராட்சியின் 1-ஆவது வார்டு பகுதிக்குள்பட்ட மதிகோன்பாளையத்தில், திருப்பத்தூர் சாலையையும், ராமக்காள் ஏரி சாலையையும் இணைக்கும் சாலையின் இருபுறமும் சுமார் 10 அடி அகலத்துக்கு ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. நகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் எடுத்த முயற்சிகள் பல்வேறு காரணங்களால் தோல்வியில் முடிந்தன.
   இந்த நிலையில், கடந்த 2013-இல் 51 வீடுகளில் ஆக்கிரமிப்புப் பகுதிகள் அடையாளமிடப்பட்டு, அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அப்பகுதியினர் காலஅவகாசம் கேட்டனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு செய்தவர்களில் 5 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதில், நகராட்சி நிர்வாகத்தை அணுகி தீர்வைத் தேடிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
   இந்த நிலையில், கடந்த நவ.1-ஆம் தேதி தருமபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில் 51 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால், நகராட்சி நிர்வாகம் அகற்றும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
   இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை 3 பொக்லைன் இயந்திரங்களுடன் அப்பகுதிக்கு வந்த நகராட்சிப் பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
   நகராட்சிப் பணியாளர்களுடன், வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் துறையினர், மின் வாரியத்தினரும் வந்திருந்தனர். நகராட்சி ஆணையர் (பொ) ந.குணாளன், பொறியாளர் கிருஷ்ணகுமார், நகரமைப்பு ஆய்வாளர் எம்.திலகவதி உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
   பிற்பகல் 2 மணிக்குள் 51 வீடுகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியையும் சேர்த்து சாலை விரிவாக்கமும், கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகளும் விரைவில் நடைபெறும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai