செடியில் கருகிய சீதா பழங்கள்: வருவாய் இழந்து தவிக்கும் மலையூர் கிராம மக்கள்!
By நமது நிருபர், தருமபுரி, | Published on : 21st November 2016 11:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பருவ மழை பொய்த்ததால், மலையூரில் செடியிலேயே சீதா பழங்கள் கருகிப் போனது. இதனால், அந்தக் கிராம மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குள்பட்டது மலையூர். மலைக் கிராமமான இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,200 அடி உயரமுள்ளது.
இந்தக் கிராமத்தில், 170 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் குறைந்தபட்சம் சுமார் முக்கால் ஏக்கர் முதல் அதிகபட்சம் சுமார் 3 ஏக்கர் நிலம் வரை வைத்துள்ளனர்.
முற்றிலும் மலைப்பகுதியான இங்குள்ள வனப் புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களில் இயற்கையாக சீதா பழங்கள் விளைகின்றன. பல ஏக்கர் பரப்பளவில் விளையும் இந்தப் பழங்கள் மிகவும் சுவையை தரக் கூடியது. இதனால், இவற்றிற்கு சந்தையில் மதிப்பு அதிகம்.
இங்கு விளையும் இந்த சீதா பழங்களை, மலையூர் கிராம மக்கள் சேகரித்து, அவற்றை கூடையில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கம்.
பொதுவாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீதா பழங்கள் அறுவடை தொடங்கி, நவம்பர் இறுதி வரையில் நடைபெறும். நல்ல தரத்தில் உள்ள பழங்கள் கிலோ ரூ.20 வரை மொத்த வியாபாரிகள் மலையூருக்கே நேரடியாக வந்து வாங்கிச் சென்று, அங்கிருந்து தமிழகத்தில் கோவை மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பர்.
இவ்வாறு அதிக விளைச்சல் இருக்கும்போது, வாரம் ஒன்றுக்கு சுமார் 20 டன் பழங்கள் வீதம், இப் பருவம் முடியும் வரை சுமார் 300 டன் பழங்கள் கிடைத்து வந்தன.
இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கிடைத்து வந்தன. இந்த வருவாய் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் பேருதவியாக இருந்து வந்தது. குறிப்பாக, மலைக் கிராமப் பெண்கள் இந்த வருவாய் மூலம் அதிக அளவு பயன்பெற்று வந்தனர்.
இந்த நிலையில், நிகழாண்டு பருவ மழைப் பொய்த்துப் போனதால், செடிகளில் பூத்த காய்கள் அனைத்தும் கனியாமல், நீரின்றி கருகிப் போனது. மேலும், மானாவாரியாக இங்கு விளையும் மல்லிகைச் செடிகளும், அதேபோல, சிறுதானியப் பயிர்களும் நீரின்றி கருகிப் போனது. இதனால் காலம், காலமாக தங்களுக்கு கிடைத்து வந்த வருவாய், நிகழாண்டு இழந்து பொருளாதாரப் பிரச்னையால் மலையூர் கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குக் கூட செல்லாமல் இருந்த இக்கிராம மக்கள், தற்போது சுமார் 20 முதல் 30 பேர் வரை இப்பணிக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சின்னசாமி கூறியது:
மலையூரில் தண்ணீர் பாசன வசதி கிடையாது. நிகழாண்டு மழையின்மையால், நிலத்தில் விதைத்த சிறுதானிய பயிர்கள் காய்ந்து விதைக் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, மல்லியும் காய்ந்து போனது. இயற்கையாக எங்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் சீதா பழங்களும் கருகிப்போனது. இதனால், நாங்கள் வருவாய் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளோம். எனவே, எங்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.